×

வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கந்தனேரியில் 20 அடிக்கு மேலாக மணல் அள்ளுவதை உடனே தடுக்க வேண்டும்

*அதிகாரிகள் ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை

வேலூர் : கந்தனேரியில் 20 அடிக்கு மேலாக மணல் அள்ளப்படுகிறது. ஆய்வு செய்து குவாரிக்கு தடை போட வேண்டும் என்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ மாலதி தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) வெங்கடேசன், மாவட்ட வனஅலுவலர் கலாநிதி, வேளாண் துணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயகுமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:

விவசாயி: சந்திரயான் 3 வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். இதேபோன்று அனைத்து துறையிலும் நாம் வெற்றிபெற வேண்டும்.

விவசாயி: லத்தேரி சந்தைப்பகுதியில் அரசு பள்ளிகள் உள்ளன. ஆனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகத்துடன் செல்கிறது. எனவே விபத்து தடுக்க வேகத்தடைகள் அமைக்க வேண்டும். இதற்கு முன்பு வரை இயற்கை விவசாயம் செய்து வந்தோம்.

தற்போது யூரியா, பொட்டாசியம் ஆகியவற்றை காசு கொடுத்து வாங்குகிறோம். இதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சோப்பு, ஷாம்பூ ஆகியவற்றை நாம் பயன்படுத்துவதால் அந்த கழிவுநீர், நிலத்தடிக்கு சென்று நீர்வளத்தை பாதிக்கிறது. இதனை கட்டுப்படுத்த மாற்று யோசனை குறித்து ஆலோசித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

விவசாயி: ரேஷன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாமாயில் விற்கப்படுகிறது. அதனை தவிர்த்து உள்ளூர் உற்பத்தியை பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். மா இலையில் ஏற்படும் பூஞ்சை பாதிப்பை தடுக்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட வன அலுவலர்: உள்ளூர் இளைஞர்களை திரட்டி யானைகளை விரட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே யானைகள் வராமல் தடுக்க, பள்ளங்கள் தோண்டப்பட்டன. ஆனால் அந்த பள்ளங்கள் தூர்ந்து போய்விட்டன. எனவே அவற்றை மீண்டும் தூர்வாரப்படும். 24 மணி நேரமும் யானைகள் உள்ளிட்ட இதர விலங்குகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயி: மேல்பட்டி, பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் நடக்கும் வாரச்சந்தைகளின்போது சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கின்றனர். இதனால் பஸ் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

டிஆர்ஓ: இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி: குடியாத்தம் சீவூர் பஞ்சாயத்து பகுதியில் நடுரோட்டில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

டிஆர்ஓ: ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி: ேபரணாம்பட்டு மலட்டாற்றில் மணல் கொள்ளை அதிகரித்துள்ளதால் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் திப்பசமுத்திரம் பகுதியில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிச்செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே மணல் கொள்ளை முழுமையாக தடுக்க வேண்டும். அவ்வப்போது கணக்கு காட்டுவதற்காக 4 மாட்டு வண்டிகளை பிடிக்கின்றனர். எனவே சிசிடிவி கேமராக்கள் வைத்து 24 மணிநேரமும் கண்காணிக்கவேண்டும். அதற்கு நாங்களும் நிதி கொடுக்க தயாராக உள்ளோம்.

டிஆர்ஓ: கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி: கே.வி.குப்பம் ஒய்யாத்தூர் ஏரியை தூர்வாரவேண்டும். பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் கார்கில் போரால் பாதித்த ராணுவ வீரர், பட்டா பிரச்னை தொடர்பாக மனு அளித்து 8 மாதங்களாகியும் தீர்வு காணப்படவில்லை.

டிஆர்ஓ: இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி: கந்தனேரி பாலாற்றில் 20 அடிக்கு மேலாக மணல் அள்ளப்படுகிறது. அங்குள்ள கிணறுகள் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேட்டால் மிரட்டுகின்றனர். எனவே குவாரிக்கு தடை விதிக்க வேண்டும். குடியாத்தம் பாக்கம் பகுதியிலும் மணல் கொள்ளை நடக்கிறது. பேரணாம்பட்டு ஏரியில் தோல் கழிவுநீர் வெளியேற்றுகின்றனர். இதனால் ஏரி பாதிக்கிறது.

டிஆர்ஓ: பேரணாம்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

விவசாயி: ஊசூர் பகுதியில் நடந்துவரும் வேளாண் அலுவலக கட்டுமானப்பணியை கண்காணிக்க வேண்டும். வேலூர் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் கால்நடை தொல்லை அதிகமாக உள்ளது. விவசாய நிலங்களில் உள்ள எந்தெந்த மரங்களை வெட்டி பயன்படுத்தலாம்.

வனஅலுவலர்: 32 வகையான மரங்களை வெட்டி பயன்படுத்தலாம். அந்த பட்டியலை வனத்துறையில் பெற்றுக்கொள்ளவும்.

விவசாயி: கே.வி.குப்பம் பகுதியில் வாழைகள் இயற்கை சீற்றத்தால் பாதித்தது. இதற்கு ஒரு மரத்திற்கு ₹5 ரூபாய் 50 பைசா என கணக்கிட்டு தருகின்றனர். ஆனால் ஒரு மரத்திற்கு குறைந்தபட்சம் ₹100 வரை செலவாகிறது. எனவே நஷ்ட ஈட்டை அதிகரித்து தரவேண்டும்.

விவசாயி: கீழ் ஆலத்தூரில் பொதுவழி ஆக்கிரமிப்பினை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிஆர்ஓ: அதிகாரிகளை பார்த்து, அடுத்த கூட்டத்திற்கு வருவதற்குள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

பாலாற்றில் கட்டும் தடுப்பணை உயரம் அதிகரிக்க வேண்டும்

வஞ்சூரில் தடுப்பணை கட்டுகிறார்கள், அதனை எதற்காக கட்டுகிறார்கள் என்றே தெரியவில்லை. பாலாற்றை விட 6 அடி கீழே உள்ளது. அங்கிருந்து தினமும் மணல் எடுத்துசெல்கின்றனர். அங்குள்ள சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்ய வேண்டும். தரைக்கீழ் தடுப்பணை போடாமல், தடுப்பணையின் உயரத்தை உயர்த்தி கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
துறை அதிகாரி: வஞ்சூரில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை தரைக்கீழ் தடுப்பணை, இதனை கட்டினால், 3 கி.மீ தூரத்திற்கு கிணற்று பாசனம் அதிகரிக்கும். இந்த தடுப்பணையின் மூலமும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். குறைந்த செலவில் இதனை மேற்கொள்ள முடியும். திட்டம் தற்போது தான் தொடங்கியுள்ளது இன்னும் முடியவில்லை, என்றார்.

₹20க்கு சாப்பாடு வழங்க வேண்டும்

வேலூர் டோல்கேட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு ₹20க்கு சாப்பாடு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருட்களை வழங்க வரும் விவசாயிகளுக்கு இந்த சலுகைவிலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி ஒருவர் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை வைத்தார்.

மாநகராட்சியில் பிறப்பு சான்று கிடைக்கவில்லை
வேலூர் மாநகராட்சியில் அணைக்கட்டு அருகே அத்தியூரைச் சேர்ந்த விவசாயி ராஜா என்பவர் அவரது பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றுக்காக விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்து 40 நாட்கள் ஆகியும் சான்று கிடைக்கவில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயி ஒருவர் கோரிக்கை வைத்தார்.

The post வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கந்தனேரியில் 20 அடிக்கு மேலாக மணல் அள்ளுவதை உடனே தடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Kandaneri ,Dinakaran ,
× RELATED கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில்...