×

மாவட்டத்தில் 550 எக்டேரில் தக்காளி சாகுபடி இலக்கு தலா ₹15 ஆயிரம் அரசு மானியம் குறித்து தெரியப்படுத்த வேண்டும்

*குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு 550 எக்டேரில் தக்காளி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், எக்டேருக்கு ₹15 ஆயிரம் அரசு மானியம் வழங்கும் திட்டம் குறித்து, மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டுமென குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்க பிரிதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் தமிழக விவசாய சங்க மாநில தலைவர் சின்னசாமி பேசியதாவது:

தர்மபுரி மாவட்டத்திற்கு வந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர், பால் உற்பத்தி விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தாமல் சென்றுள்ளது வேதனை அளிக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளை நம்பி கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களை விட, கூடுதலாக கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கரும்பில் வேர்புழு தாக்குதல் காணப்படுகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து, வேர்புழு தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு வெட்டும் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும். எண்ணேகோல்புதூர், தூள்செட்டி ஏரி பாசனத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய ஆர்வம் கொள்ளும் விவசாயிகளுக்கு, அதற்கான பட்டம் தெரிந்து சாகுபடி செய்ய வேளாண் துறை பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பாசன சங்க நிர்வாகி மோளையானூர் சுப்பிரமணியம் பேசுகையில், ‘பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 15 நாட்களுக்குள் பயிர் காப்பீடு வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி பேசுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் சிறு தானியங்கள் மற்றும் பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். இண்டூர் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் காவிரி குடிநீர் செல்லும் வகையில், விரைவாக ஒகேனக்கல் 2ம் கட்ட கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,’ என்றார்.விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் பிரதாபன் பேசுகையில், ‘தக்காளிக்கு சீரான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு 550 எக்டேரில் தக்காளி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு எக்டேருக்கு ₹15 ஆயிரம் அரசு மானியம் வழங்குகிறது. இந்த திட்டம் குறித்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். பொம்மிடி -தர்மபுரி இணைப்பு சாலை பணியை விரைவுபடுத்த, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.
விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து கலெக்டர் பேசுகையில், ‘விவசாயிகளின் உற்பத்தியையும், வருமானத்தையும் அதிகரிக்கும் வகையில், வேளாண்மைத் துறையின் அனைத்து நிலை அலுவலர்களும், வேளாண் சார்ந்த அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கப்பெறுவதை உறுதி சய்ய வேண்டும்,’ என்றார்.

பின்னர், பட்டு வளர்ச்சி துறையின் மூலம், 63 பட்டு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹10,500 வீதம் ₹10.13 லட்சம் மானியத்தொகை வழங்கினார். பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ளும் 5 பட்டு விவசாயிகளுக்கு தலா ₹1.20 லட்சம் வீதம் மானியத்தொகை ₹6 லட்சம் வழங்கினார்.கூட்டத்தில் டிஆர்ஓ(பொ) பிரியா, வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சாமிநாதன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பாத்திமா உட்பட தொடர்புடைய அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்தில் 550 எக்டேரில் தக்காளி சாகுபடி இலக்கு தலா ₹15 ஆயிரம் அரசு மானியம் குறித்து தெரியப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kuradir ,Dharmapuri ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...