×

1,552 பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது தாய் உள்ளத்தோடு மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துகிறார்

*அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திருவண்ணாமலை : கடுமையான நிதி நெருக்கடியிலும் தாய் உள்ளத்தோடு மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் நிைறவேற்றி வருகிறார் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 1,552 தொடக்கபள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை ஒன்றியம், கொளக்குடி ஊராட்சி அம்மன் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய ெதாடக்கப்பள்ளியில், காலை உணவு திட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். எம்பி சி.என்.அண்ணாதுரை, டிஆர்ஓ பிரியதர்ஷினி, ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, துணைத் தலைவர் த.ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் கலெக்டர் ரிஷப் வரவேற்றார்.விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் ₹6.25 கோடி கடன் சுமையை வைத்துவிட்டு சென்றனர். மாதம் ₹48 ஆயிரம் கோடி வட்டி கட்டும் நிலையில் ஆட்சிக்கு வந்தோம். கடுமையான கடன் சுமையிலும், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற நோகத்தில் எண்ணற்ற திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.

காலை உணவு எனும் மகத்தான திட்டத்தை, கலைஞர் பிறந்த ஊரில், அவர் படித்த பள்ளியில் முதல்வர் தொடங்கி வைத்திருக்கிறார். மாநிலம் முழுவதும் 31,800 பள்ளிகளில், சுமார் 17 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தால் பயன்பெறுகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,552 பள்ளிகளில் 87,842 மாணவர்கள் காலை உணவு பெறுகின்றனர்.குழந்தைகளின் பசி தாய்க்குத்தான் தெரியும். குழந்தைக்கு பசித்தால் தாய்க்கு பதைபதைக்கும். அதைப்போல, தாய் உள்ளம் கொண்ட முதல்வர் என்பதால்தான் காலை உணவு திட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்.

பெண்கள் படிக்கக்கூடாது என்று சொன்ன காலம் உண்டு. பெண்கள் படித்தால்தான் சமூகம் முன்னேறும், குடும்ப பொருளாதாரம் உயரும் என்பதால், அவர்களை படிக்க சொன்னவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர். ஆனால், காலப்போக்கில் சாதி, கட்சி, புற்றீசல் போல உருவாகும் அமைப்புகளால் பெண்கள் இதனை மறந்துவிடுகின்றனர்.

திமுக ஆட்சிகாலங்களில்தான் பள்ளிகள், கல்லூரிகள் அதிகம் திறக்கப்பட்டன. பெண்களுக்கு ஊக்கம் தரும் ஆட்சி திமுக. பெண்களுக்கு இலவச பஸ் பாஸ், கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை, தோழிகள் விடுதி கட்டிடம், முதல் பட்டதாரிகளின் கல்வி உதவி என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
சர்பிடி தியாகராயர் காலத்தில்தான் முதன்முதலில் மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர், படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.

ஆனால், காலை உணவு திட்டம் முதன்முறையாக முதல்வரால் கொண்டுவரப்பட்டுள்ளது. கருணை உள்ளம் இருப்பதால்தான் முதல்வர் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துகிறார். கலைஞர் உருவாக்கிய மகளிர் குழுக்களிடம், காலை உணவு திட்ட பணியை ஒப்படைத்திருக்கிறார்.ஒரு காலத்தில் கல்விபெறுவதில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. சாதாரண மனிதர்களுக்கு கல்வி கிடைக்கவில்லை. ஆனால், இது ஏகலைவன்களின் காலம். துரோணர்களின் எண்ணங்கள் இனிமேல் எடுபடாது. ஏகலைவன்களால்தான் நடக்கும். ஏனெனில், இது பெரியார், அண்ணா, கலைஞர் பிறந்த மண்.

அதனால்தான், கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விஞ்ஞானிகளாக சாதனை படைக்கின்றனர். இஸ்ரோவுக்கு அடையாளம் தந்தவரே அப்துல்கலாம்தான். நிலவுக்கு சந்திராயன் விண்கலங்களை அனுப்பிய மயில்சாமி அண்ணாதுரை, வனிதா முத்தையா, வீரமுத்துவேல் போன்றவர்கள் எல்லாம் தமிழ் வழியில் படித்தவர்கள். தமிழ்நாட்டில் பிறந்தவர்கள். அதனால், பெருமைப்படுகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.தரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், துரை.வெங்கட், தொமுச மாநில செயலாளர் க.சவுந்திரராஜன், மாவட்ட துணை அமைப்பாளர் எம்.ஆர்.கலைமணி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில தலைவர் இரா.அண்ணாதுரை, மாவட்ட துணை செயலாளர் மா.இளஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரத்திவிராஜ், அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வேட்டவலம் அடுத்த வேளானந்தல் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் விரிவடைந்த காலை உணவு திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, தாசில் தார்சாப் ஜான், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பரிமேலழகன், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் மகாலட்சுமி, ஒன்றியகுழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் படவேட்டாள் கண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு ரவை, காய்கறி கிச்சடி, கேசரி, சம்பார் ஆகிய உணவினை பரிமாறி காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்து, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

செங்கம் ஒன்றியம் நீப்பத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நீப்பத்துறை ஊராட்சி மன்ற தலைவர் சென்னம்மாள் காசி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயக்குமாரி, ஊர் முக்கிய பிரமுகர்கள் கோகுலவாணன், மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சிவராமன் அனைவரையும் வரவேற்றார். நேற்று மாணவர்களுக்கு ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் கேசரி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 1,552 பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது தாய் உள்ளத்தோடு மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துகிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Minister ,A.V.Velu ,Thiruvannamalai ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...