×

டீசல் இன்ஜினுக்கு பதிலாக பைபர் படகில் காஸ் சிலிண்டர் பொருத்தி சோதனை ஓட்டம்

தரங்கம்பாடி : பைர் படகில் டீசல் இன்ஜினுக்கு பதிலாக சமையல் காஸ் சிலிண்டரை பயன்படுத்தி மீனவர்கள் சோதனை ஓட்டம் நடத்தினர்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த பைபர் படகுகளில் டீசலால் இயங்கும் லம்பாடி இஞ்சின் பயன்படுத்தி இயக்கி வந்தனர். இதனை இயக்கும்போது நின்று கொண்டே இயக்குவதாலும், அலைகளின் தாக்கத்தின்போது அதன் விசை அழுத்தம் முழுவதும் மீனவர்கள் மீதே தாக்குவதாலும் அதிக அதிர்வுகளால் மீனவர்கள் உடல்வலி, எலும்பு தேய்மானம் என பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகினர். இதனால் லம்பாடி இஞ்சினுக்கு மாற்றாக மீனவர்கள் பெட்ரோலில் இயங்கும் அதிர்வில்லாத சுசுக்கி இன்ஜினுக்கு மாறி வருகின்றனர். தற்போதைய பெட்ரோல் விலை உயர்வு மீனவர்களை கலக்கமடைய செய்துள்ளதால் இதற்கு மாற்றாக எரிவாயு கொண்டு படகு இன்ஜினை இயக்க முடிவு செய்தனர்.அதன்படி, மீனவர் தெய்வராஜ் தனது இன்ஜின் படகை எரிவாயுவின் மூலம் இயக்க வடிவமைக்க வேண்டி தரங்கம்பாடி ஹைடெக் ஆராய்சி நிறுவனத்தை அணுகினார். மீனவரின் விருப்பத்தை ஏற்று ஹைடெக் ஆராய்ச்சி நிறுவனம் 1 மாதம் முழுவதும் எரிவாயுவால் இயங்கும் வகையில் பிரத்யேக அமைப்புகள் உருவாக்கி இன்ஜினை மாற்றம் செய்தது. கடலில் தொடர்ந்து பலமணிநேரம் இயக்கி சோதனை செய்தனர். பெட்ரோல் கொண்டு இயக்கினால் கடலில் 1 நாட்டிக்கல் செல்ல 45 முதல் 50 ரூபாய் செலவாகும். எரிவாயு மூலம் இயக்கினால் 20 ரூபாய் மட்டுமே செலவானதை உறுதிபடுத்திய மீனவர் தெய்வராஜ், ஹைடெக் ஆராய்ச்சி நிறுவனத்தார் சக மீனவர்கள் மத்தியில் பரிசோதித்து காண்பித்தனர். இதில் எந்தவித அதிர்வும், சப்தமும் இல்லாமல் படகு தடையின்றி இயங்குவதாலும், எரிபொருள் செலவீனம் பாதிக்கு பாதி குறைவதாலும் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த வகை படகு இன்ஜினுக்கு உரிய அனுமதி வழங்கவும், இன்ஜின், எரிவாயுவை மானிய விலையில் வழங்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post டீசல் இன்ஜினுக்கு பதிலாக பைபர் படகில் காஸ் சிலிண்டர் பொருத்தி சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Rangambadi ,Mayeladuthurai ,Ingine ,
× RELATED நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...