
- குருமூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
- அரியலூர்
- அரியலூர் மாவட்டம்
- செந்துரா
- குருமூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
- தின மலர்
அரியலூர், ஆக. 26:அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாரம், குழுமூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்” நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாரம், குழுமூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார்
அரியலூர் மாவட்டத்தில் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் ஊரக பகுதிகளில் உள்ள 471 அரசு தொடக்கப்பள்ளிகளில் 25,956 மாணவ – மாணவியர்களுக்கும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 6 அரசு தொடக்கப்பள்ளிகளில் 324 மாணவ, மாணவியர்களுக்கும், அரியலூர் நகராட்சியில் உள்ள 2 அரசு தொடக்கப்பள்ளிகளில் 177 மாணவ, மாணவியர்களுக்கும் என மொத்தம் 479 பள்ளிகளில் பயிலும், 26,457 மாணவ, மாணவியர்களுக்கு நேற்று முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தில் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியாக திங்கள் கிழமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை கோதுமை ரவா மற்றும் காய்கறி கிச்சடி, புதன் கிழமை வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வியாழக்கிழமை அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சேமியா காய்கறி கிச்சடி மற்றும் ரவா கேசரி ஆகிய உணவுகள் வழங்கப்படும். அரசு அனுமதித்த பிற சிற்றுண்டி உணவுகளும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கிடைக்ககூடிய காலை உணவினால் கவனக்குறைவின்றி நன்றாக படிப்பதுடன் வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் குழந்தைகள் இத்திட்டத்தால் மிகுந்த பயன்பெறுவார்கள். எனவே, இதனை பள்ளி மாணவ, மாணவியர் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தினை அரியலூர் சட்டமன்ற தொகுதியில் பொய்யாதநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆறுமுகம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், செந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் எழில்மாறன் , திமுக நிர்வாகி ராமராஜ் , மாவட்ட நிலை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post குழுமூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கம் appeared first on Dinakaran.