×

வேப்பூர் அரசு கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

குன்னம், ஆக.26: பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பெரம்பலூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம், பராமரிப்பு மற்றும் விழுப்புரம் சாலை பாதுகாப்பு அலகு சார்பில் “விபத்தில்லா தமிழ்நாடு எங்கள் பொறுப்பு” என்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் கோட்ட பொறியாளர் கலைவாணி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மணிமேகலை வரவேற்றார். நிகழ்ச்சியில் விழுப்புரம் கோட்ட பொறியாளர் காந்த், குன்னம் உட்கோட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் தமிழ் அமுதன் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பொது மக்கள் அனைவரும் வாகன ஒட்டுனர் உரிமம் பெற்ற பின்னரே வாகனங்களை முறையாக இயக்க வேண்டும், வாகனம் ஓட்டும் போது, தலைகவசம், சீட்டு பெல்ட் அணிந்து செல்ல வேண்டும், கண்டிப்பாக வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழிமுறைகளை தோழன் அமைப்பு ஜெகதீஸ்வரன், நந்தகுமார் கோவிந்தன் ஆகியோர் எடுத்து கூறினார். மேலும், விபத்தில் சிக்கியவர்களுக்கு எவ்வாறு முதல் உதவி செய்வது என்பது குறித்தும் நேரடியாக மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். தொடர்ந்து மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பின்னர் சாலை பாதுகாப்பு குறித்த வினாடி, வினா கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.

The post வேப்பூர் அரசு கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Veypur Government College ,Gunnam ,Perambalur District Highways Department ,Veypur Government College for Women ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி