×

குமரி மாவட்டத்தில் 333 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில், ஆக.26 : குமரி மாவட்டத்தில் மேலும் 333 பள்ளிகளில், காலை உணவு திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாதவலாயம் அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று காலை நடந்தது. கலெக்டர் தர் தலைமை வகித்தார். நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள காலை உணவு திட்டம் ,குமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்குட்பட்ட 42 அரசு பள்ளிகளில் 3,994 மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டது. தற்போது மாநகராட்சி மற்றும் அனைத்து நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளிலும் உள்ள மேலும் 333 பள்ளிகளில் கல்வி பயின்று வரும் 24,343 மாணவ, மாணவிகளுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக குமரி மாவட்டத்திலுள்ள 375 அரசு பள்ளிகளில் பயின்று வரும் 28,337 மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர்.

எங்கு படித்தோம் என்பது முக்கியமல்ல. எப்படி படித்தோம் என்பதே முக்கியமாகும். அரசு பள்ளியில் படித்த பலரும் சாதனையாளர்களாக வந்துள்ளார்கள். அரசு பள்ளி மாணவர்களாகிய நீங்களும் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைக்க வேண்டும். தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இலக்கு வைத்து படிக்க வேண்டும். நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் மாணவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இது மிகப்பெரிய தவறான செயலாகும். டாக்டர் படிப்பு தவிர மற்ற படிப்புகள் உள்ளன. அதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோரும் தங்களது எண்ணத்தை மாற்ற வேண்டும்.

குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரியை தூய்மை மாவட்டமாக கொண்டு வர குப்பை இல்லா குமரி என்ற இயக்கத்தை நடத்தி வருகிறோம். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை மாணவ-மாணவிகள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், திட்ட இயக்குநர்கள் பாபு (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), பீபீஜான் (மகளிர் திட்டம்), நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாதவலாயம் ஊராட்சி மன்றத் தலைவர் ரெஜினா ராஜேஷ், துணைத்தலைவர் பீர் முகமது, தோவாளை மற்றும் அகஸ்தீஸ்வரம் வேளாண் விளைபொருள் கூட்டுறவு சங்க இயக்குநர் பூதலிங்கம் பிள்ளை, தோவாளை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஷேக் செய்யது அலி உட்பட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். முன்னதாக திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் தர், மேயர் மகேஷ் ஆகியோர் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

அதிகம் சம்பளம் வாங்கும் ஆசிரியரிடம் படிக்கிறேன்
அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர் ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் தனியார் பள்ளியில் ஆசிரியர்களுக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நாங்கள் அதிகம் சம்பளம் வாங்கும் ஆசிரியரிடம் படிப்பதாக கூற வேண்டும். சந்திராயனை மிகப்பெரிய வெற்றி அடைய செய்தது தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தாங்கள் நன்றாக விரும்பும் பாடத்தை விருப்ப பாடமாக எடுத்து படித்தால் நீங்கள் சாதனை படைக்கலாம். அரசு பள்ளியில் படிப்பதை பெருமையாக கருத வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

செய்திதாள்கள் படிக்க வேண்டும்
அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், பள்ளி புத்தகங்களை மட்டுமல்லாமல் செய்திதாள்கள், புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும். பொது அறிவை வளர்க்க வேண்டும். சமூகத்தில் நடப்பவற்றை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ள வேண்டும். செய்திதாள்கள் வாசிப்பது மிகவும் முக்கியம் ஆகும். தற்போது சமூக ஊடகங்கள் வளர்ந்துள்ளன. ஒரு தவறான சம்பவம் நடந்து விட்டால் அந்த சம்பவத்தை கூட ஒரு நிமிடத்தில் உலகம் முழுவதும் பரப்பும் அளவிற்கு சமூக ஊடகங்கள் வளர்ந்து விட்டது என்றார்.

The post குமரி மாவட்டத்தில் 333 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Minister Mano Thangaraj ,Nagercoil ,Minister ,Mano Thangaraj ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் டெப்போ முன் பி.எம்.எஸ். ஆர்ப்பாட்டம்