×

காற்றாலை கனரக வாகனங்களால் சேதமடையும் எத்திலப்பநாயக்கர்பட்டி – வேலாயுதபுரம் சாலை: மண் சாலையாக மாறும் முன்பு புதுப்பித்த ரோட்டை பாதுகாக்க கோரிக்கை

எட்டயபுரம், ஆக. 26: காற்றாலை பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் எத்திலப்பநாயக்கர்பட்டி – வேலாயுதபுரம் சாலை சேதமடைந்து வருகிறது. மண் சாலையாக மாறும் முன்பு புதுப்பிக்கப்பட்ட இந்த ரோட்டை பாதுகாக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எத்திலப்பநாயக்கர்பட்டியில் இருந்து வேலாயுதபுரம், சுப்புலாபுரம், கரையாம்பட்டி வழியாக விளாத்திகுளம் செல்லும் சுமார் 5 கிலோ மீட்டர் இணைப்பு சாலை, கடந்த 45 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. இதனால் விளாத்திகுளம் மற்றும் தூத்துக்குடி, மதுரை செல்லும் கிராம மக்கள், கீழஈரால் மற்றும் எப்போதும்வென்றான் வழியாக சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது. சம்பந்தப்பட்ட கிராம மக்கள், 5 கிமீ தொலைவு கொண்ட இந்த இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எத்திலப்பநாயக்கர்பட்டி – வேலாயுதபுரம் சாலை புதுப்பிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் சாலை அமைத்து தார் செட் ஆகும் முன்பே இவ்வழியாக தனியார் காற்றாலை நிறுவனங்களில் கனரக வாகனங்கள் வரிசைகட்டி செல்லத் துவங்கியுள்ளன. சாலை ஒப்பந்ததாரரும், தார் செட்டாகும் முன்பே செல்ல வேண்டாமென கேட்டுக் கொண்டும், சாலையின் நடுவே நிறுத்தப்பட்ட தார் வாகனத்தை ஓரமாக எடுத்துவிட்டும் இரவு நேரங்களில் வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்கின்றன. இதன் காரணமாக சாலையில் பல இடங்களில் தாருடன் ஜல்லிக்கற்கள் பாலம், பாலமாக பெயர்ந்து வருகின்றன. கிராமப்புற சாலைகள், குறைந்தது 5 வருடங்களுக்கு ஒரு முறைதான் அமைக்கப்படுகின்றன.

இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு சாலை சென்றாலும் அதில்தான் பயணிக்க வேண்டும். அதிகாரிகள் கண்காணிப்பின்றி அவசர கதியில் போடப்படும் கிராம சாலைகள், வழக்கமாகவே ஓரிரு ஆண்டுகளில் பழுதடைந்து விடும் நிலையில், காற்றாலை இயந்திரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் எத்திலப்பநாயக்கர்பட்டி – வேலாயுதபுரம் சாலை ஓரிரு வாரங்கள் தாக்குப்பிடிக்குமா? என கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 45 ஆண்டுகள் கழித்து வராதுவந்த மாமணிபோல் வந்த சாலையை பாதுகாக்க, காற்றாலை நிறுவன கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து திமுக கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய முன்னாள் துணை செயலாளர் அன்புபேகம் கூறுகையில், எத்திலப்பநாயக்கர்பட்டி ஏ.வேலாயுதபுரம் இணைப்பு சாலை கடந்த 45 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை.

எங்களது தொடர் கோரிக்கையை ஏற்று அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆகியோரின் உதவியால் ரூ.10 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை புதுப்பிக்கும் பணி, கடந்தாண்டு தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தார் செட்டாகும் முன்பே இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் பயணிக்கின்றன. இதனால் சாலை விரைவில் சிதிலமடையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காற்றாலை நிறுவன கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்ல உத்தரவிட வேண்டும் அப்போதுதான் இந்த சாலை ஓரிரு ஆண்டுகளுக்காவது தாக்குப்பிடிக்கும். இல்லை என்றால் சில வாரங்களிலேயே மண் சாலையாக மாறிவிடும், என்றார்.

The post காற்றாலை கனரக வாகனங்களால் சேதமடையும் எத்திலப்பநாயக்கர்பட்டி – வேலாயுதபுரம் சாலை: மண் சாலையாக மாறும் முன்பு புதுப்பித்த ரோட்டை பாதுகாக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ethilappanayakarpatti ,Velayuthapuram road ,Ettayapuram ,Velayuthapuram ,Windmill ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...