
புதுச்சேரி, ஆக. 26: புதுச்சேரி வியாபாரிகளை ஏமாற்றி போலி செல்போன்களை, விற்க முயன்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் மோசடி கும்பலை பெரியகடை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். புதுச்சேரி பெரிய காலாப்பட்டைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (32). அண்ணா சாலையில் உள்ள இவரது மொபைல் ஷோரூமிற்கு ஒரு வாரத்துக்கு முன்பு ஒருவர் போன் செய்து குறைந்த விலைக்கு ஆப்பிள் போன் இருப்பதாக கூறவே ராஜ்குமாரும் அழைத்துள்ளார். பின்னர் தனது கடைக்கு செல்போன்களுடன் வந்த நபரின் அனுமதியோடு ராஜ்குமார் ஒரு செல்போன் பாக்ஸை சீல் பிரித்து பார்த்தபோது, அது போலியானதாக இருக்கவே சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மறுநாள் வருமாறுகூறி அனுப்பினார்.
இதற்கிடையே அந்த நபர் புதுச்சேரியில் உள்ள மற்ற மொபைல் ஷோரூம்களை குறிவைத்து, போலி செல்போனை விற்க முயற்சித்தது அவரது நண்பர்கள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து மறுநாள் (19ம்தேதி) மாலை மீண்டும் அந்த நபர் மற்றொரு நபரோடு வந்தபோது அவர்களை பிடிக்க முயன்றபோது தப்பி ஓடினர். இருப்பினும், ராஜ்குமாரும், கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் விரட்டி சென்று ஒருவரை மட்டும் மடக்கிப் பிடித்து பெரியகடை காவல் நிலைத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், கேரளா மாநிலம், பாலக்காடு, பாலோடு கிராமத்தை சேர்ந்த உமருல் பாரூக் (28) என்பதும், இவருடன் வந்தவர் முகமது ஷாகிப் என்பதும், இவர்களுடன் மேலும் சிலர் கும்பலாக சேர்ந்து தனித்தனி குழுக்களாக பிரிந்து சென்று போலியான ஆப்பிள் செல்போனை அதிக பணத்திற்கு விற்று சம்பாதிக்க முயற்சித்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக மோசடி கும்பல் மீது வழக்குபதிந்த போலீசார் தலைமறைவான முகமது ஷாகிப், உபியைச் சேர்ந்த முசையித் (30), டாலிப் சௌத்ரி (34), ஜிஸ்அன்செள்திர் (33), காஷிப் (30) உள்ளிட்ட மேலும் 5 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடமிருந்து போலியான 10 ஆப்பிள் போன்கள், ஏர்போட்ஸ் 35, புளூடூத் 15, யுஎஸ்சி 128, ஜிபி 6 ஆகியவற்றை கைப்பற்றினர். போலி செல்போன்கள் மட்டுமின்றி திருட்டு நகைகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இவர்கள் செல்போன் விற்கும் போர்வையில் கடைகள், வீடுகளுக்குள் சென்றபோது நகைகளை திருடியதும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் துருவி துருவி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post புதுவை வியாபாரிகளிடம் போலி செல்போனை விற்க முயன்ற வடமாநில கும்பல் அதிரடி கைது: விசாரணையில் திடுக் தகவல் appeared first on Dinakaran.