×

தொற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சி: மாநகராட்சி அறிவிப்பு

 

சென்னை, ஆக.26: தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 2 ஆண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கான மாணவ சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 2023-24ம் ஆண்டிற்கான மருத்துவ இணையியல் படிப்பான, 2 ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி (ஏ.என்.எம் கோர்ஸ்) தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவியருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவியரும் விண்ணப்பிக்கலாம். உதவி செவிலியர் பயிற்சிக்கு 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு விதிகளின்படி ஒற்றை சாளர முறையில் சமூகம் வாரியாக சுழற்சி முறையில் மாணவியர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இயக்குநர் (பொ) தொற்றுநோய் மருத்துவமனை எண்.187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-600 081 என்ற முகவரியில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் 30.8.2023 முதல் 7.9.2023 வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 8.9.2023 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

The post தொற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சி: மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Epidemic Hospital ,Chennai ,Thandaiyarpet Epidemic Hospital ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...