×

கடம்பாடி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் ஆழ்துளை கிணறு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

மாமல்லபுரம், ஆக. 26: கடம்பாடி ஊராட்சியில் ஆபத்தானநிலையில் உள்ள ஆழ்துளை கிணற்றை மூட, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி ஊராட்சிக்குட்பட்ட கடம்பாடி கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். மேலும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குளக்கரை சாலையையொட்டி ரூ.1.75 லட்சம் மதிப்பில் பல அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக பழுதடைந்த ஆழ்துளை கிணறு மூடப்படாமல் ஆபத்தை விளைவிக்கும் நிலையில் உள்ளது. மேலும், குளக்கரை தெரு சாலை வழியாக தினமும் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என பலரும் சென்று வருகின்றனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆழ்துளை கிணறு அருகே விளையாட அனுமதிப்பது இல்லை. இந்த மூடப்படாத ஆழ்துளை கிணற்றால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயநிலை உள்ளது.

இதுகுறித்து கடம்பாடி ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாகவே செயல்படுவதாக கூறப்படுகிறது. எத்தனையோ, அசம்பாவிதங்களை தடுத்து, மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், ஆழ்துளை கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கடம்பாடி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் ஆழ்துளை கிணறு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kadambadi Panchayat ,Mamallapuram ,Gadambadi Panchayat ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில்...