×

நில அபகரிப்பு போன்ற மோசடிகளை தவிர்க்க உரிமையாளர் பட்டாவுடன் ஆதாரை இணைக்கலாம்: வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: நாடு முழுவதும் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றவும், ஆதார், பான் உள்ளிட்ட தகவல்களை அதனுடன் இணைக்கவும் ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது.தமிழகத்தில் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக பட்டா, நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைன் வாயிலாக வழங்கும் பணி செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தற்போது பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களில் உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நில அளவை மற்றும் வருவாய்த் துறை முடிவு செய்துள்ளது.

தற்போது பட்டாவில் இடம்பெறும் விவரங்களில் உரிமையாளரின் அடையாளத்தை உறுதி செய்ய போதுமான ஆவணங்கள் இல்லை என்பதால் பட்டா உள்ளிட்ட ஆவணங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் பெயரில் எத்தனை சொத்துகள் உள்ளது என்பதை அரசு சார்ந்த துறைகள் தெரிந்து கொள்ள இது உதவும் என்றும் நில அபகரிப்பு போன்ற மோசடிகளை தடுக்க இந்த புதிய முறை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தற்போதைய நிலையில் வெறும் ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கிறது. இதை சிலர் முறைகேடாக பயன்படுத்தி தங்களை சட்டப்பூர்வ நில உரிமையாளராக காட்டிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. கணினி மயமாக்கப்பட்ட நில ஆவணத்துடன் ஆதாரை இணைப்பதன் மூலம், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும். உண்மையான உரிமையாளர்கள் மட்டுமே பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை உறுதி செய்ய முடியும்.

நில பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் ஆவணங்களை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக உண்மையான உரிமையாளர்கள் மட்டுமே பத்திரப்பதிவு பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை உறுதி செய்ய முடியும். மாநில அரசின் இந்த முன்மொழிவுக்கு ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post நில அபகரிப்பு போன்ற மோசடிகளை தவிர்க்க உரிமையாளர் பட்டாவுடன் ஆதாரை இணைக்கலாம்: வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,patta ,CHENNAI ,PAN ,Union ,Dinakaran ,
× RELATED மறைமலைநகரில் கலைஞர் நூற்றாண்டை...