×

தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை 40% உயர்ந்துள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: தமிழக அரசின் காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை 40 சதவீதம் உயர்ந்துள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள சென்னை நடுநிலை பள்ளியில் காலை உணவு திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் மாணவர்களுடன் உணவு அருந்தினார். மேலும் மாணவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் சாப்பாடு நல்லா இருக்கிறதா என்று கேட்டார். எங்கிருந்து வருகிறீர்கள், எத்தனாம் வகுப்பு படிக்கிறீர்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி நிலைக்குழு தலைவர்(பணிகள்) சிற்றரசு, மண்டலகுழு தலைவர் எஸ்.மதன்மோகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: காலை உணவு திட்டத்தின் முலம் 30 முதல் 40 சதவீதம் வரை மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளியை பொறுத்தவரை 358 பள்ளிகளில் 65 ஆயிரத்து 130 மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை பொறுத்தவரைக்கும் 16 பள்ளிகளில் 1036 பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

இத்திட்டத்தில் மாணவர்களுடன் நானும் ஒரு பயனாளி. எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் மாணவர்களுடன் தான் சாப்பிடுவேன். இதற்காக நானும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இத்திட்டம் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும். உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமின்றி உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் ஆய்வு செய்வார்கள். இதற்கான பிரத்யேக ஆப் மூலம் கண்காணிக்கப்படுகிறது. உணவு தயாரிக்கும் இடம் முதல் மாணவர்களுக்கு கொண்டு சென்று வழங்கும் வரை கண்காணிக்கப்படுகிறது.

எங்கேயாவது குறையிருந்தால் அதுவும் சரி செய்யப்படும். உலக செஸ் சாம்பின்ஷிப் போட்டியில் பங்கேற்று 2வது இடம் பிடித்து சென்னைக்கு வரும் பிரக்ஞானந்தாவுக்கு வரவேற்பு அளிக்கப்படும். இது அவரின் மிகப்பெரிய சாதனை. இந்த அளவுக்கு அவர் சென்றது மிகப்பெரிய வெற்றி. 19 வயதில் இவ்வளவு பெரிய சாதனையை செய்துள்ளார். இன்னும் பல சாதனைகளை செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை 40% உயர்ந்துள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Udhayanidhi Stalin ,Tamil Nadu government ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...