×

ரூ.1.30 கோடி கள்ளநோட்டு வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்: போலீஸ் கமிஷனர் ரத்தோர் நடவடிக்கை

சென்னை: சென்னையில் ரூ.1.30 கோடி அளவுக்கு கள்ளநோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர் மணி (26). இவர் தனது சகோதரர் தினேஷூன் இணைந்து வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர்கள் கடைக்கு கடந்த 17ம் தேதி மாலை வந்த வயதான நபர் ஒருவர் ரூ.670க்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கிக்கொண்டு 2 புதிய ரூ.500 நோட்டுகள் கொடுத்துள்ளார். அவை கள்ளநோட்டுகள் என தெரியவந்தது.

உடனே கள்ளநோட்டுகளை கொடுத்த பள்ளிக்கரணை பாலாஜி நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலையை (64) போலீசில் ஒப்படைத்தனர். அவர் அளித்த தகவலின்படி விருகம்பாக்கம் ஸ்டேட் பாங்க காலனி 3வது தெருவை சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுப்பிரமணியன் (52) என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி ரூ.45.20 லட்சம் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கள்ளநோட்டுகளை பதுக்கி வைத்திருந்த சுப்பிரமணியன், ராணுவ வீரர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். கள்ள நோட்டுகள் அச்சடித்து கொடுத்த ஊழியர் கார்த்திகேயன் மற்றும் அச்சக உரிமையாளர் வினோத்குமாரும் கைது செய்யப்பட்டனர்.

வழக்கறிஞர் தனது நண்பர்கள் மூலம் சென்னை முழுவதும் ரூ.84.80 லட்சம் மதிப்புள்ள ரூ.500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருப்பதும் விசாரணையில் உறுதியானது. இந்த மோசடி பின்னணியில் பல முக்கிய நபர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கள்ளநோட்டு வழக்கை உயர் போலீஸ் அதிகாரிகள் பரிந்துரைப்படி மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கள்ளநோட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளனர்.

வழக்கு தொடர்பான கோப்புகளை நுங்கம்பாக்கம் போலீசார் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர். அதேநேரம், கள்ளநோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட வழக்கறிஞர் சுப்பிரமணியன், அவரது நண்பர் முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை மற்றும் கள்ளநோட்டுகள் அச்சடித்து கொடுத்த கார்த்திகேயன், அச்சக உரிமையாளர் வினோத் குமார் ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்து வருகின்றனர்.

The post ரூ.1.30 கோடி கள்ளநோட்டு வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்: போலீஸ் கமிஷனர் ரத்தோர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Central Crime Branch ,Chennai ,Nungampakkam… ,Commissioner ,Rathore ,Dinakaran ,
× RELATED பெங்களூரு போதை டான்ஸ் வழக்கு;...