×

ஆற்காடு சுரேஷை கொலை செய்த வழக்கு நெல்லையில் சரணடைந்த 2 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல்: சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி

சென்னை: கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷை கொலை செய்த வழக்கில் நெல்லையில் சரணடைந்த 2 பேரிடம் 3 நாள் காவலில் விசாரணை நடத்த பட்டினப்பாக்கம் போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் கடந்த 18ம் தேதி பிரபல ரவுடியும் கூலிப்படை தலைவனுமான ஆற்காடு சுரேஷை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

இந்த கொலை குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 19ம் தேதி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயல் பகுதியை சேர்ந்த சந்துரு (எ) சைதாப்பேட்டை சந்துரு (29), எம்ஜிஆர் நகர் சூளைபள்ளம் வெங்கட்ராமன் சாலையை சேர்ந்த யமஹா மணி (எ) மணிவண்ணன் (26), ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மோசூர் சாலையை சேர்ந்த ஜெயபால் (63) ஆகியோர் சரணடைந்தனர்.

மேலும் சரணடைந்த 3 பேரிடம் நடத்திய விசாரணையில் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட போது, காரில் பிரபல ரவுடி பாம் சரவணன் இருந்ததாக தெரிவித்துள்ளனர். அதேநேரம், இந்த கொலை வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை நீதிமன்றத்தில் நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்த ரவுடி செந்தில் குமார் மற்றம் முத்துக்குமார் ஆகியோர் சரணடைந்து, ஆற்காடு சுரேஷை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று தெரிவித்துள்ளனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேநேரம் ஆற்காடு சுரேஷ் கொலை தொடர்பாக அரக்கோணத்தை சேர்ந்த மோகன் என்பவரை பட்டினப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்நிலையில் பட்டினப்பாக்கம் போலீசார் ஆற்காடு சுரேஷை கொலை செய்ததாக நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்த செந்தில் குமார் மற்றும் முத்துக்குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்டினப்பாக்கம் போலீசார் சரணடைந்த 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சரணடைந்த 2 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கினார்.

இதைதொடர்ந்து, பட்டினப்பாக்கம் போலீசார் செந்தில் குமார் மற்றும் முத்துக்குமாரை காவலில் எடுத்து, ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான பாம் சரவணன் குறித்தும், அதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில், இதுவரை 5 பேர் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். ஒருவரை மட்டும் தான் பட்டினப்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஆற்காடு சுரேஷை கொலை செய்த வழக்கு நெல்லையில் சரணடைந்த 2 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல்: சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Nella ,Arkadu Suresh ,Saidapet Court ,CHENNAI ,Nellai ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர்...