×

அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொது செயலாளர் நியமனத்தை எதிர்த்து ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட நான்கு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை பதினொன்றாம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி இருந்தது இதையடுத்து அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியது, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது போன்ற தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் ஒ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடிபி பிரபாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் நடைபெற்றது. இந்த மேல்முறையீட்டு வழக்குகள் மீது ஏழு நாட்கள் வாதம் நடைபெற்று இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்குகள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்குகளில் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு நேற்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்தனர். தீர்ப்பில், பொதுக்குழு தீர்மானம் செல்லுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 23ம் தேதி தெளிவாக குறிப்பிட்டுள்ளது. 2022 ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று 2022 செப்டம்பர் 2ம் ேததி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

பொதுக்குழுவில் அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர். பொதுக்குழுதான் கட்சியின் முழு அதிகாரம் கொண்ட அமைப்பு. பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கம் செய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை எதிர்த்து இடைக்கால தடை கோரிய மனு தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்துதான் இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள சிவில் வழக்கில்தான் உரிய முகாந்திரங்களை காட்டி நிவாரணம் பெற முடியும். ஒற்றை தலைமை வேண்டும் என்று 2460 உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில்தான் பொதுக்குழு கூட்டப்பட்டது. மனுதாரர்கள் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை இரு முறை அணுகியும் பொதுக்குழு நடத்தியதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவில்லை.

பொதுக்குழு செல்லும் என்றுதான் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து முறையிட்டுள்ளனர். இதையும் சிவில் வழக்கில்தான் முடிவு செய்ய முடியும்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முகாந்திரம் இல்லை. இதை மனுதாரர்கள் நிரூபிக்க தவறிவிட்டனர். கட்சியின் சட்ட திட்டங்களில் பொதுக்குழு தீர்மானம் கொண்டுவந்ததற்கு மொத்தமுள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 உறுப்பினர்கள் ஆதரவு ெதரிவித்துள்ளனர். பொதுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தந்திருப்பதை தனி நீதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். பொதுக்குழு செல்லுமா, செல்லாதா என்பது குறித்து தனி நீதிபதி தௌிவாக உத்தரவில் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றமும் இந்த விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு பொதுக்குழு மற்றும் அதில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை கோர முடியாது. மனுதாரர்களை கட்சியின் அடிப்படை பதவியிலிருந்து நீக்கம் செய்து பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டுவந்திருப்பது செல்லத்தக்கது என்று தனி நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார். சிறப்பு தீர்மானத்திற்கு இடைக்கால உத்தரவு பெற எந்த முகாந்திரமும் இல்லை. பொதுச்செயலாளர் பதவி நியமனம் குறித்து மனுதாரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கட்சியின் தலைமை பதவி இல்லையென்றால் கட்சி செயல்பாட்டில் சிக்கல் ஏற்படும். அதன் அடிப்படையில்தான் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மனுதாரர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபிறகு அவர்களால் பொதுக்குழு தீர்மானத்தின் மீது எந்த இடைக்கால உத்தரவையும் கோர முடியாது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவில் இந்த நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. மனுதாரர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

The post அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொது செயலாளர் நியமனத்தை எதிர்த்து ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : O.P. ,Chennai High Court ,Chennai ,O.T.A. ,Panneerselvam ,O.C. ,GP ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி...