×

பிரதமர் மோடிக்கு கிரீஸின் உயரிய விருது: அதிபர் வழங்கினார்

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டின் உயரிய விருதான’ கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் ஆனர்’ என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.  தென்னாப்பிரிக்காவில் நடந்த 15வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டுக்கு பின் நேற்று ஒரு நாள் பயணமாக கிரீஸ் புறப்பட்டு சென்றார். கிரீஸ் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் ஜார்ஜ் ஜெராபெட்ரிடிஸ் வரவேற்றார். ஏதென்ஸ் சென்ற பிரதமர் மோடி, சின்டாக்மா சதுக்கத்தில் உள்ள போர் நினைவு சின்னமான மறைந்த வீரர்கள் கல்லறையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் கதேரினா என் சகெல்லரோபவுலோவை சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.  பின்னர் பிரதமர் மோடி அந்நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசை சந்தித்தார். இந்தியா-கிரீஸ் உறவை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘‘2030ம் ஆண்டுக்குள் இந்தியா-கிரீஸ் வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு, கல்வி, புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாயம் ஆகிய தறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளோம்.

தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இருதரப்பும் கவனம் செலுத்தும்” என்றார். தொடர்ந்து ஏதென்சில் உள்ள ஓட்டலுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு ஏராளமான புலம்பெயர் இந்தியர்கள் திரண்டு மேளதாளங்கள் முழங்க, வந்தே மாதரம் என்ற முழக்கத்துடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பலர் தங்களது கைகளில் மூவர்ண கொடியை ஏந்தியும், பலர் பிரதமருடன் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அதிபர் மாளிகையில் நடந்த விழாவில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் ஆனர் என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அந்நாட்டின் அதிபர் சகெல்லரோபவுலோ இந்த விருதை வழங்கினார். கிரிஸ் விருதை பெறும் முதல் வெளிநாட்டு தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி- ஜீ ஜின் பிங் சந்திப்பு; இந்தியா கோரியதா?
ஜோகன்ஸ்பர்க்கில் பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின் பிங் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். இது குறித்து சீனா வௌியிட்ட அறிக்கையில் இந்தியாவின் கோரிக்கையின்பேரில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் சீனாவின் இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்த கோரிக்கை ஏற்கனவே நிலுவையில் இருந்ததாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

The post பிரதமர் மோடிக்கு கிரீஸின் உயரிய விருது: அதிபர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : President ,Greece ,Modi ,Athens ,
× RELATED சொல்லிட்டாங்க…