×

ஆர்வமுடன் வாங்கும் மக்கள் குமரிக்கு விற்பனைக்கு வந்த மயில் தோகை விசிறிகள்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் மயில் தோகையில் செய்யப்பட்ட விசிறிகள் விற்பனை ஜோராக நடக்கிறது. விசிறிக்காக தேசிய பறவையினமான மயில்கள் அழிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வன பகுதிகள் நிறைந்த பகுதி ஆகும். காடுகளை பாதுகாக்கும் வகையில் இங்கு தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டமும் உள்ளது. இங்குள்ள வன பகுதிகளில் பல்வேறு வகையிலான உயிரினங்கள் உள்ளன. நெல்லை மாவட்டம் களக்காடு உள்ளிட்ட வன பகுதிகளும், குமரி மாவட்டத்தையொட்டி தான் அமைந்துள்ளன.

வன விலங்குகள் கொல்லப்படும் சம்பவங்களும் அவ்வப்போது குமரி மாவட்டத்தில் நடந்துள்ளன. குறிப்பாக தேசிய பறவையினமான மயில்களும் வேட்டையாடப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் சில நாட்களாக மயில் தோகையால் செய்யப்பட்ட விசிறி, மயில் இறகு விற்பனை செய்து வருகின்றனர். ஒரு விசிறி ரூ.150, ஒரு இறகு ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, கன்னியாகுமரி – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விற்பனை கொடி கட்டி பறக்கிறது. மயில் இறகு வீட்டில் வைத்தால் சனி தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்ற நம்பிக்கை உள்ளதால் அதிகம் பேர் வாங்கி செல்கிறார்கள். இவர்களுக்கு எங்கிருந்து மயில் இறகு கிடைக்கிறது.

இதற்காக தேசிய பறவையினம் அழிக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வெளி மாவட்டத்தில் இருந்து அதிகம் பேர் வந்து விற்பனை செய்து வருகிறார்கள். பைக், கார்களில் செல்பவர்கள் அதிகம் பேர் இதை ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள். இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் கூட அவர்கள் கண்டு கொள்ளவில்லை. மயில் என்பது தேசிய பறவையினமாகும். மயில் வேட்டையாடப்படாமல், இவ்வளவு இறகுகள் எப்படி கிடைக்கிறது என்ற சந்தேகத்ைத வனத்துறை நிவர்த்தி செய்ய வேண்டும். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post ஆர்வமுடன் வாங்கும் மக்கள் குமரிக்கு விற்பனைக்கு வந்த மயில் தோகை விசிறிகள் appeared first on Dinakaran.

Tags : Peacoon ,Kumari ,Nagarkovil ,Zor ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...