
சேலம்: வரலட்சுமி விரதத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் பெளர்ணமி தினத்திற்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு வரலட்சுமி விரதம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பெரும்பாலான வீடுகளில் வரலட்சுமி பூஜைக்கு வருமாறு சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் கொடுத்து அழைக்கப்பட்டனர்.
வீடுகளில் சர்க்கரை பொங்கல், பாயாசம், கொழுக்கட்டை, விதவிதமான கலவை சாதம் நைவேத்தியம் வைத்து பூஜை செய்தனர். பின்னர் பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், நோன்புக்கயிறு, வளையல்கள், வெற்றிலை பாக்கு, ரவிக்கைதுணி கொடுத்து சுமங்கலி பெண்களிடம் திருமணமான பெண்கள், திருமணாகாத பெண்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இந்நாளில் லட்சுமியை வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல்நலம் உண்டாகும்.
வரலட்சுமி விரதத்தையொட்டி சேலம் எல்லைபிடாரியம்மன் கோயிலில் அம்மன் வளையல்கள் அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். இதேபோல் கோட்டை மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், குகை காளியம்மன், மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், பட்டைக்கோயில் சின்னமாரியம்மன், பொன்னம்மாப்பேட்டை மாரியம்மன், சித்தேஸ்வரா காளியம்மன், நெத்திமேடு காளியம்மன், தண்ணீர்பந்தல் காளியம்மன், தாதகாப்பட்டி வழிவாய்கால் காளியம்மன், சேலம் சுகவனேஸ்வரர், தாரமங்கலம் கைலாசநாதர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், உத்தமசோழபுரம் கரபுரநாதர், இரண்டாவது அக்ரஹாரம் காசிவிஸ்வநாதர் உள்பட சேலம் மாவட்டத்தில் சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது. இவ்விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
The post வரலட்சுமி விரதத்தையொட்டி சேலம் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.