×

தமன்னா ஃபிட்னெஸ்

நன்றி குங்குமம் டாக்டர்

தமிழ்த் திரையுலகில், ஹேப்பி டேஸ்’ படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கி, அடுத்தடுத்த கட்டத்திற்கு வேகமாக முன்னேறி தற்போது முன்னணி கோலிவுட் நடிகைகளில் ஒருவராகத் திகழ்பவர் தமன்னா. அப்பாவித்தனமான தோற்றத்தால், ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்தவர் இவர். தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளைக் கடந்த பின்னும், கொஞ்சமும் உடல் தோற்றத்தில் மாற்றமில்லாமல் ஃபிட்டாக வைத்திருக்கும் இவர் தனது பிட்னெஸ் குறித்து பகிர்ந்து கொள்கிறார்:

வொர்க்கவுட்ஸ்

தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் என்னுடைய நாளை தொடங்குவதே யோகாவில் இருந்துதான். மன அழுத்தத்தைக் குறைக்கவும் எமோஷனலாக இருக்கும்போது நிறைய சாப்பிடுவதைத் தவிர்க்கவும் யோகாதான் சிறந்த வழி. இவை எல்லாவற்றையும் விட யோகா செய்வதன் மூலம் கூடுதலாகக் கலோரிகளையும் எரிக்க முடியும். அதன்பிறகு சின்னசின்ன உடற்பயிற்சிகள் மேற்கொள்ளுவேன். அதன்பிறகு ஜிம்முக்கு கிளம்பிச் சென்றுவிடுவேன்.

ஷூட்டிங் அல்லது வேறு என்ன வேலை இருந்தாலும் சரி ஜிம்முக்கு செல்வதை மட்டும் தவிர்க்கவே மாட்டேன். ஷூட்டிங் நேரத்துக்கு ஏற்றபடி ஜிம்முக்கு செல்லும் நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்வேனே தவிர ஒரு நாள் கூட ஜிம்மை கட் அடிக்க மாட்டேன். ஜிம்மில் வெயிட் லிப்டிங், க்ரஞ்சஸ், ஏபிஎஸ், கார்டியோ ஆகிய பயிற்சிகள் மேற்கொள்வேன். வெயிட் லிப்டிங் உள்ளிட்ட கார்டியோ பயிற்சிகள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்வதோடு அதிகப்படியான கலோரிகளையும் எரிக்க உதவிசெய்யும்.

இது தவிர, ​பிலேட்ஸ் பயிற்சிகள் இருக்கும். இது உடலை இலகுவாகவும் நெகிழ்ச்சித் தன்மையுடனும் வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது. மேலும், ஒட்டுமொத்த உடலையும் வலுப்படுத்தவும் நெகிழ்வைக் கொடுக்கும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள் இந்த பிளேட் பயிற்சிகள். அதுபோன்று, எனது வொர்க்கவுட்டில், நீச்சல்பயிற்சியும் ஒன்று. நீச்சல்பயிற்சி உடலைப் புத்துணர்ச்சி அடையச் செய்வது மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலையும் இயக்கக்கூடியது. ஒட்டுமொத்த உடலையும் வலுப்படுத்தும். குறிப்பாக தோள்பட்டை, கைகள், இடுப்பு ஆகிய பகுதிகளை வலுவாக்கி தசைவளர்ச்சியை மேம்படுத்தக்கூடியது.

டயட்

நான் கண்டதையும் உண்ணும் பழக்கம் இல்லாதவள். பிட்னஸுக்கு என்ன தேவையோ அந்த டயட்டையே ஃபாலோ செய்கிறேன். அதுவே, ஆரோக்கியமாக வைக்கும் என்றும் நம்புகிறேன். எனவேதான், வொர்க்கவுட்டுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறேனோ, அதேபோன்று, டயட்க்கும் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.அந்தவகையில், எனது காலை உணவு காய்கறிகள் சேர்த்த ஆம்லெட் 2 மற்றும் ஒரு கிண்ணத்தில் கிரானூலா சேர்த்த கார்ன்பிளேக்ஸ், நட்ஸ், பழங்கள் அதனுடன் பாதாம் பால் சேர்த்து எடுத்துக் கொள்வேன்.

மதிய உணவில் வெள்ளை அரிசியை தவிர்த்துவிட்டு, பிரௌன் ரைஸ் எடுத்துக் கொள்வேன். அதோடு நிறைய காய்கறிகள் பொரியல் இருக்கும். மேலும், எனது மதிய உணவில் கட்டாயம் யோகர்ட் இருக்கும். யோகர்ட் ப்ரோ-பயோடிக் நிறைந்த உணவுகளில் ஒன்று. இதனை டயட்டில் சேர்த்துக் கொள்ளும்போது அதிலுள்ள புரதம், தசை வளர்ச்சியை மேம்படுத்தவும் சருமத்தை டோன் செய்யவும் உதவுகிறது. அதோடு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தந்து அதிக கலோரிகள் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க உதவுகிறது. மேலும், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து தேவையற்ற கொழுப்புகளை எரித்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கிறது.

இரவு நேரங்களில் எப்போதும் ஹெவியாக சாப்பிட மாட்டேன். ஒரே ஒரு தோசை? தொட்டுக் கொள்ள சாம்பார். இதுதான் எனது இரவு உணவு. அதையும், இரவு எட்டு மணிக்கு முன்பாக முடித்துவிடுவேன்.அதுபோன்று ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடித்துவிடுவேன். அதுமட்டுமின்றி இடைவெளி நேரங்களில் ஜூஸ், இளநீர், வெஜிடபிள் சூப் போன்ற திரவ உணவுகளையும் எடுத்துக் கொள்வேன். இவைதான் எனது தினசரி டயட் சார்ட்.

பியூட்டி

நான் பெரும்பாலும் கெமிக்கல்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதில்லை. வீட்டில் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டுதான் என் அழகை பராமரித்துக் கொள்கிறேன்.

அந்தவகையில், முகத்துக்கு, தயிர் பேஸ்மாஸ்க் போட்டுக் கொள்வேன். தயிரில் உள்ள துத்தநாகம், முகத்தில் வழியும் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தி இயற்கையான அழகை கொடுக்கிறது. மேலும், முகத்தை குளிர்ச்சியாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க கற்றாழையை பயன்படுத்துகிறேன். இது தவிர, வார்த்தில் ஒரு நாள் கட்டாயம், முல்தானிமட்டி, சந்தனம், மஞ்சள், வேப்பிலைகள் சேர்த்து அரைத்த பேஸ் பேக் காட்டாயம் போட்டுக் கொள்வேன்.

முடி வளர்ச்சிக்கு வெங்காயச்சாறு பயன்படுத்துகிறேன். வெங்காயச்சாறில் இருக்கும் கந்தகம், கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை கொடுக்கிறது. அதுபோன்று, மேட் லிப்ஸ்டிக்குகளை விட லிப் கிளாஸ் போடுவதுதான் பிடிக்கும். அதுவும் என் நிறத்துக்கு ஏற்றவாறு, வெளிர் இளஞ்சிவப்பு, பீச், பிரவுன் நிறங்கள் ரொம்ப பிடித்தவை.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post தமன்னா ஃபிட்னெஸ் appeared first on Dinakaran.

Tags : Fitness ,Kunkumum Dr. ,Tamannaah Fitness ,
× RELATED அனஸ்வரா ராஜன் ஃபிட்னெஸ்