×

ஈட்டி எறிதலில் உலக நாடுகளை மிரட்டும் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா; உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியுடன் ஒலிம்பிக்கிற்கும் தகுதி..!!

புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 19ம் தேதி தொடங்கியது. வரும் 27ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது. இதில் 200 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தத் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்று இன்று நடந்தது.

இதில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 83.00 மீட்டர் வீச வேண்டும். ஆனால், முதல் வாய்ப்பிலேயே 88.77 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா விளையாட உள்ளார். 12 பேர் பங்கேற்கும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் நீண்ட தூரம் வீசியதன் மூலம் 2024ம் பாரீஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிக்கும் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். இதனால், அவர் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு மென்மேலும் வலுத்துள்ளது. இதனிடையே, மற்றொரு இந்திய வீரரான டி.பி.மானுவும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். தகுதிச் சுற்றில் 81.31 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்த டி.பி.மானு, குரூப் ஏ பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

The post ஈட்டி எறிதலில் உலக நாடுகளை மிரட்டும் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா; உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியுடன் ஒலிம்பிக்கிற்கும் தகுதி..!! appeared first on Dinakaran.

Tags : Neeraj Chopra ,Olympics ,World Athletic Championship ,Budapest ,World Athletic Championship Series ,Niraj Chopra ,Dinakaran ,
× RELATED விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 3...