×

தெலங்கானாவில் நிலநடுக்கம் வீடுகள் குலுங்கியது; மக்கள் பீதி

ஐதராபாத்: தெலங்கானாவின் வாரங்கல் பகுதியில் இன்று அதிகாலை 4.43 மணியளவில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. வாரங்கலுக்கு கிழக்கே சுமார் 127 கி.மீ தொலைவில் 30 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது லேசான அளவில் பதிவாகியுள்ளது என்பதால் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

பொதுவாக நிலநடுக்கம் என்பது முன்கூட்டியே கணிக்க முடியாததாகும். முன்கூட்டியே கணிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். அதேபோல நிலநடுக்கம் ஏற்படும் போது பாதுகாத்து கொள்ளும் செயல்முறை குறித்தும் அரசு அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அதாவது நிலநடுக்கம் உணரப்பட்டால் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும். தாமதமானால் வீட்டிற்குள் இருக்கும் கட்டில், மேஜை உள்ளிட்ட ஏதாவது ஒன்றின் கீழ் ஒளிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்படி ஒளிந்துகொள்ளும்போது ஜன்னல் மற்றும் கண்ணாடி பொருட்கள் ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பது முக்கியம்.

ஏனெனில் வீடுகள் சரியும் போது ஜன்னல் கம்பிகள் நமக்கே ஆபத்தாக மாறிவிடும். அதேபோல அடுக்குமாடி போன்றவற்றில் குடியிருப்பவர்கள் அவசரமாக வெளியேற முயற்சிக்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்கும் சம்பவமும் நடக்கிறது. கார், பைக் போன்றவற்றில் பயணம் செய்பவர்கள் நிறுத்திவிட வேண்டும் என்றும் பேரிடர் மீட்பு படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

The post தெலங்கானாவில் நிலநடுக்கம் வீடுகள் குலுங்கியது; மக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Telangana ,Hyderabad ,Telangal region of ,National ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து