×

ஓணம் பண்டிகையை முன்னிட்டு விமான நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்: கட்டணம் பலமடங்கு உயர்வு

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் கேரள மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பயணிகளிடையே பரபரப்பு நிலவி வருகிறது. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை அனைத்து தரப்பு மக்களாலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகையை கேரள மக்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒன்றுசேர்ந்து கொண்டாடுவது வழக்கம். இதற்காக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தங்கி வேலை பார்க்கும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு, தங்களின் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு வரும் 29ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணி காரணமாக குடும்பத்துடன் தங்கியுள்ள கேரள மக்கள், தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் உள்ள தங்களின் சொந்த ஊர்களுக்கு விமானங்கள் மூலமாக புறப்பட்டு செல்லத் துவங்கியுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.

இதைத் தொடர்ந்து, கேரள மாநில நகரங்களுக்கு செல்லும் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால், தற்போது கேரள மாநிலத்துக்கு செல்லும் அனைத்து விமானங்களின் கட்டணங்களும் பலமடங்கு உயர்ந்துள்ளன. சென்னையில் திருவனந்தபுரத்துக்கு வழக்கமான விமான கட்டணம் ரூ.3,225. தற்போது ரூ.10 ஆயிரம் முதல் ரூ.19 ஆயிரம் வரை கட்டணம் உயர்ந்துள்ளது. இதேபோல் சென்னை-கொச்சிக்கு வழக்கமான கட்டணம் ரூ.2,962. தற்போது ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. சென்னை-கோழிக்கோடுக்கு வழக்கமான கட்டணம் ரூ.3,148. தற்போது ரூ.5 ஆயிரம் முதல் ரூ.21 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. சென்னை-கண்ணூருக்கு வழக்கமான கட்டணம் ரூ.3,351. தற்போது ரூ.7 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது.

எனினும், சென்னையில் இருந்து கேரளா செல்லும் விமான பயணிகள் கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல், ஓணம் பண்டிகையை சொந்த ஊரில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக விமானங்களில் ஆர்வமாக பயணம் செய்து வருகின்றனர். மேலும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் விடுவதை போல், கேரள மாநிலத்துக்கு கூடுதல் சிறப்பு விமான சேவைகளைத் துவக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

The post ஓணம் பண்டிகையை முன்னிட்டு விமான நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்: கட்டணம் பலமடங்கு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Oenam Festival ,Alyamoti ,Chennai airport ,Kerala ,Oranum Festival ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்