×

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்: திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் கெடு

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டத்தில் நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். சித்ரா மரணம் அடைந்தது தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோருக்கு எதிராக தற்கொலைக்கு தூண்டியதாக காவல்துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையானது திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, வழக்கு விசாரணையை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது. அத்துடன் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், விசாரணையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருவதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும் வயது முதுமை காரணமாக திருவள்ளூர் வரை சென்று வருவதற்கு சிரமமாக இருப்பதாகவும், இந்த வழக்கில் உள்ள பெரும்பாலான சாட்சிகள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருப்பதால் வழக்கு விசாரணையை திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். தொடர்ந்து, விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஹேம்நாத் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், வழக்கில் 67 சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை சென்னை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்ற மறுத்த நீதிபதி, சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

The post சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்: திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் கெடு appeared first on Dinakaran.

Tags : Chitra ,ICourt ,Thiruvallur ,Chennai ,
× RELATED 5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர்...