*ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்
வாலாஜா : வாலாஜா ஊராட்சி ஒன்றிய கூட்டம் பிடிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராதாகிருஷ்ணன். பிடிஓக்கள் சிவராமன். சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்: ஒன்றியக்குழு தலைவர்: வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள் போதுமான அளவுக்கு இல்லாததால் துரிதமாக பணிகளை செய்ய முடியவில்லை. ஆகவே கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமித்திட மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த தீர்மானத்திற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஒப்புதல் அளித்தனர் தொடர்ந்து, அவ்வப்போது நடைபெறும் கிராம சபா கூட்டங்களில் கண்டிப்பாக ஒன்றிய கவுன்சிலர்களை அழைத்திட பிடிஓக்கள் உறுதி செய்ய வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஒப்புதல் அளித்தனர். துணைத்தலைவர்: வாலாஜா அடுத்த நெல்லிக்குப்பம் கிராமத்தில் தோல் தொழிற்சாலை கழிவு நீரால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆகவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.புவனேஸ்வரி (கவுன்சிலர்): ராணிப்பேட்டை அடுத்த பெல் ஊரக பகுதியில் நாய் தொல்லை அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்ட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாராயணன் மற்றும் வசந்தி கணேசன் (கவுன்சிலர்கள்): ஒன்றிய கவுன்சிலரின் நிதியிலிருந்து நடைபெறும் வளர்ச்சி பணிகளில் ஒன்றிய கவுன்சிலர்கள் பரிந்துரை செய்யும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் பொது நிதியிலிருந்து ₹11.97 லட்சத்தில் வாலாஜா அடுத்த வன்னிவேடு ஊராட்சியில் நடைபெறும் அங்கன்வாடி மையம் கட்டிடம் விரைந்து முடித்திட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
The post கிராமப்புறங்களில் கூடுதல் தூய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும் appeared first on Dinakaran.