×

வருசநாடு அருகே மலைக்கிராமங்களுக்கு தார்ச்சாலை வருமா?

*மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வருசநாடு : கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் மலைக்கிராம மக்கள் மேம்பாட்டிற்காக செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.

தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சாலை, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. சாலை விரிவாக்க பணிகள், பாதாள சாக்கடை பணிகள், வாறுகால் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

திமுக ஆட்சியில் மலைக்கிராம மக்கள் நலன்கருதி அறிமுகப்படுத்தப்பட்ட, ஏராளமான திட்டங்களை அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைத்தனர். அதனால், பல கிராமங்கள் அடிப்படை வசதியின்றி தத்தளித்து கொண்டிருக்கின்றன.அதன்பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும், மலைக்கிராமங்களில் சாலைகள் அமைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். சாலைகள் தரமாக அமைக்கப்பட்டால் தான் மலைக்கிராமக்களுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பின் அந்த பகுதிகளில் உள்ள சாலைகள் அமைக்கபட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சியில் மேலபூசனுாத்து, கீழபூசனுாத்து, சாந்திபுரம், முத்தூத்து உட்பட 20க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, முருக்கோடை ஆகிய கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பண்டாரவூத்து மலைக்கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த 60 ஆண்டு காலமாக இந்த கிராமத்திற்கு தார்ச்சாலை வசதி இல்லாமல் மிகவும் பரிதவித்து வருகின்றனர். முத்தூத்து, பூசணூத்து உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்ல சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் நடந்தோ அல்லது கூடுதல் தொகை கொடுத்து ஆட்டோக்களிலோ செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல வெளியூர் செல்லும் பொதுமக்கள் பஸ்சிற்காக வருசநாடு வரை நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் வருசநாடு அருகே பசுமலைத்தேரியில் இருந்து பொன்னன்படுகை கிராமம் வரை சுமார் 5 கி.மீ நீளமுடைய சாலையின் இருபுறமும் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை, கொட்டை முந்திரி உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அதிகம் பயன்படுத்தி வரும் பாதையில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பசுமலைத்தேரி முதல் பொன்னன்படுகை வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

ஆனால் இதில் சில பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் தார்சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பாதை குண்டும் குழியுமாக இருப்பதால் விவசாயிகள் விளைபொருட்களை ஏற்றிச் செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் விளைபொருட்களை தேனி, சின்னமனூர் உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்பி வைக்க கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதியில் நிறுத்தப்பட்டதால் சாலை பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்கள்.

இதுகுறித்து கிராமவாசிகள் கூறுகையில், ‘‘ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்கராஜபுரம் கிராமத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. இதே போல் பொன்னன்படுகை ஊராட்சி கொங்கரவு கிராமத்திலிருந்து கடமலைக்குண்டு செல்லும் சாலைகுண்டும் குழியுமாக உள்ளது. எனவே, இப்பகுதியில் விரைவில் தார்ச்சாலை அமைக்க வேண்டும்’’ என்றனர்.

The post வருசநாடு அருகே மலைக்கிராமங்களுக்கு தார்ச்சாலை வருமா? appeared first on Dinakaran.

Tags : tarchala ,Varusanadu ,M. K. Stalin ,Chief Minister ,Tamil ,Nadu ,
× RELATED திமுகவின் 40 எம்.பி.க்களும்...