×

கோத்தகிரியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

கோத்தகிரி : கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுகுளா, கொணவக்கரை, குஞ்சப்பனை ஆகிய 3 ஊராட்சி மன்ற வட்டாரத்தில் நடைபெற்று வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முடிவுற்ற, நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு சுற்றுலாதுறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில், நெடுகுளா ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட லில்லிஹட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடை, கப்பட்டி பகுதியில் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.84 லட்சம் மதிப்பீட்டில் தோட்டக்கலை துறையின் சேமிப்பு அறை, கேர்க்கம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.50லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையல் அறை கூடத்தினையும், காவிலோரை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15லட்சம் மதிப்பிலும், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 பல்நோக்கு கட்டிட பணிகளையும், சன் சைன் நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு கட்டிடத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், கொணவக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கீழ் ஹட்டியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடம், 15-வது நிதிக்குழு மானியத்தின் மூலம் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 கால்வாய்களையும், குஞ்சப்பனை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட முள்ளூர் முதல் அரையூர் மட்டம் வரை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.56 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் கான்கிரீட் சாலை பணிகள், முள்ளூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடை, சக்தி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு கட்டிட பணிகள் என மொத்தம் ரூ.2.71 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு ெசய்தார்.

அதன்பின், அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில்,“தமிழ்நாடு முதல்வர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறார்.

அதன் அடிப்படையில், இந்த ஆய்வு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின் போது அனைத்து பகுதிகளிலும் நடைபெற்ற பணிகள் அவற்றின் தரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தோம். விரைவில் நடைபெற்று வரும் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது’’ என்றார்.

இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குநர் உமா மகேஷ்வரி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷனகுமார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் சாம் சாந்தகுமார், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார், கோத்தகிரி வட்டாட்சியர் கோமதி, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், அனிதா மற்றும் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் காவிலோரை பீமன், மாவட்ட பிரதிநிதி போஜன், பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன், ராஜூ மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post கோத்தகிரியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Kothagiri ,Nedukula ,Konavakarai ,Kunjappanai ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்