×

ஆன்லைன் ரம்மி இங்கே… ஆரோக்கியம் காத்த அம்மி எங்கே?தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தொலைந்து போன பாரம்பரியம்-பழமையை அழியாமல் பாதுகாக்க வேண்டுகோள்

சாயல்குடி : தமிழர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த உரல், உலக்கை, அம்மி, முறம் போன்ற பொருட்களின் பயன்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சியால் அழிந்து விட்டது. இதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை அனைவரும் இழந்து வரும் சூழலில், பாரம்பரியத்தை காக்க பழமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பாரம்பரியமாக நாம் பயன்படுத்தி வந்த பொருட்களின் பயன்பாடு, கால ஓட்டத்தில் நவீனமாக்கப்பட்டு விட்டது. ஒரு காலத்தில் ஆட்டு உரல் அப்படியே இருக்கும். நாம் அதை சுழற்றுவோம். இப்போது அப்படியா? சுவிட்ச் போட்டால் போதும். அதுவே அரைத்து பாத்திரத்திலும் பத்திரமாக மாற்றிக் கொடுத்து விடுகிறது. இப்படியாக நாம் பயன்படுத்தி வந்த பல பொருட்கள் காலப்போக்கில் நவீனமயமாக மாறி விட்டன. இதனால் பல நூற்றாண்டுகளாக நாம் பயன்படுத்தி வந்த குளுமை, உரல், உலக்கை, திருகு, அம்மி, முறம், படி போன்ற பொருட்கள் அழிவை நோக்கி சென்று விட்டன.அதென்ன குளுமை என்கிறீர்களா? பழங்காலத்தில் இது நெல் உள்ளிட்ட தானியங்களை கொட்டி, மேற்பகுதியில் இறுக்கமாக மூடி வைப்பார்கள். குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள் வரை தானியங்கள் கெடாமல் இருக்கும். அரிசியை தனியாக பிரித்தெடுக்கவும், மாவு அரைப்பதற்கும் உரல், உலக்கை, குழவி கல் பயன்படுத்தப்பட்டது. உரல்களில் சாதாரண உரல், ஆட்டுரல் என பிரிவு உண்டு. அரிசி, கேப்பை, கம்பு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள், உளுந்து போன்ற பயறு வகைகளை ஆட்டு உரலில் மாவாக ஆட்டி, ஆரோக்கியமான உணவாக பயன்படுத்தி வந்தனர். கூட்டுக்குடும்பங்களிலும், வணிகரீதியாகவும் பயன்படுத்தப்பட்டன. சில கிராமங்களில் ஊருக்கு பொதுவாக ஆட்டுரல் வைத்திருந்த காலமெல்லாம் உண்டு.வீட்டில் மசாலா பொருட்கள் அரைப்பதற்காக அம்மி மற்றும் அதனுடன் குழவி கல் பயன்படுத்தப்பட்டது. அறுவடைக்கு பிறகு சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள், காய்ந்த மிளகாய் வத்தல் போன்றவற்றை மிருதுவாக அரை பதத்தில் அரைப்பதற்கு திருகை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் இவற்றின் பயன்பாடு நாளடைவில் அழிந்து விட்டது என்றே கூறலாம். குளுமை, உரல், உலக்கை, முறம், படி தயாரிப்பவர்கள், அம்மி குத்துபவர்கள் என இதனை சார்ந்த தொழிலாளர்களின் வாரிசுகளும் இந்த தொழிலை விட்டு, விட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். அழிந்து வரும் நமது பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டுமென பழமை ஆர்வலர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.குளுமை தயாரிப்பாளர் கடலாடி சண்முகசுந்தரம் கூறுகையில், ‘‘60 வருடங்களுக்கு முன்பு வரை குளுமை தயாரித்து வந்தோம். ஆனால் தொடர் வறட்சியால் விவசாயம் பொய்த்து போனது. விவசாயிகள் விளைந்த நெல் உள்ளிட்ட தானியங்களை சேமிக்காமல் நேரடியாக கடைகளுக்கு சென்று விற்று பணமாக்கினர். இதனால் குளுமையின் பயன்பாடு முற்றிலும் காணாமல் போய் விட்டது. இன்றைய நவீன காலத்தில் நெல்லை அறுவடை செய்வது முதல் அவித்து, அரிசியாக்கி, பைகளில் தருவது வரை இயந்திரமயமான தொழில்நுட்ப வசதிகள் வந்து விட்டது. ரைஸ்மில் போன்ற ஆலைகள், கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் வருகையால் பாரம்பரிய பொருட்கள் காணாமல் போய் விட்டது. கிராமங்களில் உலக்கை, படி, உரல் போன்ற பொருட்கள் சுபகாரியம் மற்றும் இறுதிச்சடங்கு போன்ற சம்பிரதாய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது வழக்கத்தில் உள்ளது. இந்த முறையும் பெரும்பாலான இடங்களில் குறைந்து வருகிறது’’ என்றார்.தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறுகையில், ‘‘தமிழ் நாகரீகம் தோன்றிய பண்டைய காலம் தொட்டு ஆரோக்கியமான உணவு பொருள் உற்பத்திக்கு உரல்கள், அம்மிக்கல் மற்றும் அதனை சார்ந்த உபபொருட்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த பொருட்களை உடல் பயிற்சியுடன் நிதானமாக கையாண்டு, தரமான பொருட்களை எடுத்து சமைத்து சாப்பிட்டதால், நம் முன்னோர்கள் உடல் ஆரோக்கியமாக இருந்து வந்தனர். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் உணவு பொருள் உற்பத்தி முறை மாறியது. இதனால் சர்க்கரை நோய் முதலான சிறிய நோய்கள் முதல் புற்றுநோய் வரையிலான பெரிய நோய்கள் வரை வர துவங்கி மனிதன் ஆரோக்கியத்தை இழந்து, நோயை தேடி பயணம் செல்லும் நிலை ஏற்பட்டு விட்டது’’ என்றார்….

The post ஆன்லைன் ரம்மி இங்கே… ஆரோக்கியம் காத்த அம்மி எங்கே?தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தொலைந்து போன பாரம்பரியம்-பழமையை அழியாமல் பாதுகாக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Ammi ,Sayalkudi ,
× RELATED மயிலாடி சிற்பங்களுக்கு கற்கள் கிடைக்குமா? தொழிலாளர்கள் கவலை