×

35 ஊராட்சிகளுக்கும் இணைய வசதி உபகரணங்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள 35 ஊராட்சிகளுக்கும் பாரத் நெட் திட்டத்தின் கீழ் இணைய வசதி ஏற்படுத்துவதற்காக அமைக்கப்படும் உபகரணங்களை சேதப்படுத்துதல், களவாடுதல் உள்ளிட்ட செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அம்ரித் எச்சரித்துள்ளார். கிராம ஊராட்சிகளை இணையம் மூலமாக இணைத்து அரசின் சேவைகளை பொதுமக்கள் பெற்று அதன்மூலம் பயன் பெறும் வகையில் பாரத்நெட் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இத்திட்டத்தை ரூ.3 ஆயிரம் கோடி செலவில் ஒன்றிய அரசின் பங்களிப்புடன் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (டான்பிநெட்) என்ற தனி அமைப்பு உருவாக்கப்பட்டு தமிழக அரசே செயல்படுத்தி வருகிறது.

பாரத் நெட் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளும் ஆப்டிக்கல் பைபர் மூலம் இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள், தங்கள் கிராமங்களில் இருந்தே இணையம் மூலமாக பயனடையும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 35 ஊராட்சிகளுக்கும் ஆப்டிக்கல் பைபர் கேபிள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் டான்பிநெட் மூலம் அமைக்கப்படும் மின்கலன், இன்வெட்டர், கண்ணாடி இழை கேபிள் போன்ற அரசுக்கு சொந்தமான உபகரணங்களை சேதப்படுத்துதல், களவாடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களில் 35 கிராம ஊராட்சிகளுக்கும் ஆப்டிகல் பைபர் கேபிள் மூலமாக 1 GBPS அதிவேக இணையதள இணைப்பு வழங்கும் பாரத்நெட் பேஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழுவீச்சில் ேகபிள் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இரண்டு மாதங்களில் முழுமையாக நிறைவுபெறும்.

இணையதள வசதிக்காக அமைக்கப்படும் கண்ணாடி இழை கேபிள் தரை வழியாகவும் மின்கம்பங்கள் மூலமாகவும் இணைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளில் சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கென உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் உள்ள அறை சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேபோல், உபகரணங்களை பாதுகாக்கவும் தடையில்லா மின் வசதியை ஊராட்சி செயலாளர் உறுதி செய்ய ேவண்டும்.

இத்திட்டம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்தால் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் இணையதள வசதி மூலம் சம்பந்தப்பட்ட கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களுடைய பகுதியிலேயே இணையதளத்தை முழுமையாக பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்நிலையில், கிராம ஊராட்சிகளில் உள்ள சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் டான்பிநெட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும் மின்கலன், இன்வெட்டர், ரூட்டர் மற்றும் கண்ணாடி இழை ஆகிய உபகரணங்கள் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது. எனவே இவற்றை சேதப்படுத்துதல், களவாடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post 35 ஊராட்சிகளுக்கும் இணைய வசதி உபகரணங்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Bharat Net ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்