×

தென்மேற்கு பருவமழை பொய்த்தது குமரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

*விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்

நாகர்கோவில் : தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் குமரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று நாகர்கோவிலில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தர் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கீதா, வேளாண்மை இணை இயக்குனர் வாணி, பொதுப்பணி துறை நீர்வள ஆதார அமைப்பு இணை இயக்குனர் ஜோதிபாசு, தோட்டக்கலை அலுவலர் ஷீலா ஜாண், பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ, விவசாயிகள் தாணுபிள்ளை, முருகேசபிள்ளை, செண்பகசேகரபிள்ளை, தங்கப்பன், விஜி உட்பட விவசாயிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விவசாயிகள்: பேச்சிப்பாறை அணையில் இருந்து பட்டணங்காலில் தண்ணீர் திறக்கவில்லை. கால்வாய் சீரமைப்பு பணிகளை காரணம் காட்டி தண்ணீர் திறப்பு தாமதம் ஆகிறது. இதனால் குடிநீர் பிரச்னை ஏற்படுகிறது. மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக இந்த நிலை உள்ளது. தற்போது குடிநீர் உப்புநீராகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பட்டணங்காலில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

நீர்வளத்துறை அதிகாரி: குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு பொய்த்துவிட்டது. பட்டணங்காலில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவு பெற்றதும் செப்டம்பரில் 15ம் தேதிக்கு பிறகு தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.விவசாயிகள்: கால்வாய் தூர்வாரும் பணிகள் எப்போது தொடங்கினீர்கள். ஏன் நீங்கள் தாமதம் செய்தீர்கள். அணையில் 40 அடி வரை தண்ணீர் இருக்கத்தானே செய்தது, அப்போதும் ஏன் திறந்துவிடவில்லை. பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தால் பணிகளை நிறுத்திவிட்டு தண்ணீர் திறக்க வேண்டும். விவசாயிகள் போராட தயங்கமாட்டார்கள். பேச்சிப்பாறை அணையில் 7 அடி தண்ணீர் இருக்கும் போது சாகுபடி சிறப்பாக நடந்தது.

இப்போது ஏன் தண்ணீர் தர தாமதம் ஏற்படுகிறது.நீர்வளத்துறை அதிகாரி: தோவாளை சானலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் கண்டறிய போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள்: உடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்.பி சானலில் தண்ணீரை அடைத்து தோவாளை சானலில் தண்ணீர் கொடுக்கப்பட்டது. இதனால் கால்வாயில் வெள்ளம் பெருகி உடைப்பு ஏற்பட்டுள்ளது. மரங்களின் வேர்கள் வாயிலாக நீர் கசிவு ஏற்பட்டதும் இதற்கு காரணம் ஆகும்.

கால்வாய் உடைப்பு பற்றி பொதுப்பணித்துறை விசாரிக்காமல் போலீசார் விசாரிப்பார்கள் என்று கூறுவது ஏன்?

நீர்வளத்துறை அதிகாரி: தோவாளை சானலில் உடைப்பு ஏற்பட்டதும் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இன்று (நேற்று) மாலை பணிகள் முடிந்து விடும். நாளை (இன்று) முதல் தண்ணீர் விநியோகம் செய்யப்படும். பேச்சிப்பாறை அணையில் இருந்து சுழற்சி முறையில் இன்னும் 30 நாட்கள் விவசாயத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.

விவசாயி விஜி: குமரி மாவட்டத்தில் மழை குறைவான அளவில் இந்த ஆண்டு பெய்துள்ளது. விவசாயிகளுக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் சரி செய்ய வேண்டி யுள்ளது. எனவே தமிழக அரசு குமரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து இழப்பீடு வழங்க வேண்டும். நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு முதல் போகத்திற்கு காப்பீடு திட்டம் இல்லை. அதனால் விவசாயிகள் காப்பீடும் செய்யவில்லை.

விஜி: குமரி மாவட்டத்தில் நெல் வயல்களை மண் கொட்டி நிரப்பி பிளாட் போடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் நேரடி கவனம் செலுத்தி கலெக்டர் கள ஆய்வு செய்து அவற்றை தடுத்து விவசாயத்தை காக்க வேண்டும். திருப்பதிசாரம் விதைப்பண்ணையில் 15 ஏக்கர் ஏன் பயிர் சாகுபடி செய்யப்படவில்லை.

இலவச மின்சாரம் பெற பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளரின் என்ஓசி தேவையா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல்துறைக்கு கொடுக்கும் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை. வன விலங்குகளால் ஏற்படும் விவசாய பாதிப்பை தடுக்கும் வழிமுறைகளை வனத்துறை விளக்க வேண்டும். குளங்கள் தூர்வாருவதற்கு வழங்கும் அனுமதிக்கு காலதாமதம் ஏன் என்றும் விவசாயிகள் கேள்வி எழுப்பி விவாதத்தில் ஈடுபட்டனர்.

சிற்றார் அணையில் இருந்து பட்டணங்கால்வாயில் தண்ணீர்

நீர்வள அதிகாரி: இரணியல் ரயில்வே பாலம் பணிகளில் புதிய பாலம் மட்டத்தை உயர்த்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்ததும் 20 நாளில் தண்ணீர் விநியோகம் செய்யப்படும். பட்டணங்காலில் விரைந்து தண்ணீர் கொண்டு வரப்படும். பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் இல்லாவிட்டாவிலும் சிற்றார் அணையில் இருந்து பட்டணங்காலில தண்ணீர் கொண்டுவரப்படும்.

தற்போதுள்ள சாகுபடி பயிர்களை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 1ம்தேதி முதல் நடவு செய்தவர்களுக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு குறைவாக உள்ளது. இன்னும் 20 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும். பொதுவாக நாட்டில் அணைகள் தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை. பேச்சிப்பாறை அணை தூர்வார பல்வேறு அனுமதிகள் பெறப்பட வேண்டியுள்ளது. பட்டணங்கால் பாலூர் பகுதியில் தூர்வாரும் பணிகள் தண்ணீர் திறக்கும் முன்னர் சீர் செய்யப்படும்.

The post தென்மேற்கு பருவமழை பொய்த்தது குமரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : south-west ,Kumary ,Farmers Reduction Day ,Nagarko ,Kumari district ,Southwest ,Dinakaran ,
× RELATED கோடைகால குடிநீர் தட்டுப்பாடு...