×

கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு ரோப்கார் வசதி

*சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

சேந்தமங்கலம் : கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு, ரோப் கார் வசதி செய்து தர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், சிறந்த சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்அருவி, சந்தனபாறை அருவி, அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயில், தாவரவியல் பூங்கா, சீக்குப்பாறை, காட்சிமுனையம், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை பார்த்து செல்கின்றனர்.

இதில் அறப்பளீஸ்வரர் கோயில் எதிரே உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு, வனப்பகுதியில் இருந்து உற்பத்தியாகி வரும் தண்ணீர், பெரியாற்றின் வழியாக இரண்டு மலைகளுக்கு இடையே செங்குத்தாக கீழே 330 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. இதில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க அறப்பளீஸ்வரர் கோயிலின் எதிரில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் முழு கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு செல்ல 1100 படிக்கட்டுகளை செங்குத்தாக இறங்கி சென்று குளிக்க வேண்டும். வயதானவர்கள், நோய்வாய் பட்டவர்கள் இங்கு இறங்கி குளிக்க முடியாத நிலை உள்ளது.

இளைஞர்கள் மற்றும் குடிமகன்கள் ஆர்வக்கோளாறு காரணமாக, ஆபத்தை அறியாமல் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு குளிக்க இறங்கிச் செல்லும் போது, பாதியிலேயே மயங்கி விழுந்து மரணமடைகின்றனர். மேலும் சிலர், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியின் எதிரே உள்ள தண்ணீர் தேங்கியுள்ள தடாகத்தில் புதை மணலில் சிக்கி இறக்கின்றனர். இதுவரை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சென்ற 50க்கு மேற்பட்டோர், தவறி விழுந்து இறந்துள்ளனர்.

எனவே, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு ரோப் கார் வசதி செய்து கொடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையின் மூலம் ரோப் கார் வசதி செய்து கொடுத்தால், அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், வயதானவர்கள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை நேரில் பார்ப்பதற்கும், குளிப்பதற்கும் வசதியாக அமையும் என உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகாய கங்கையில் குளிக்க தற்காலிக தடை

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில், கடந்த ஒருமாத காலமாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அவ்வப்போது சுற்றுலாப் பயணிகள் செல்லவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு வந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த வாலிபர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் மயங்கி விழுந்து இறந்ததால், நீர்வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறையினர் தற்காலிக தடை வைத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை ரேஞ்சர் சுப்பராயன் கூறுகையில், ‘பராமரிப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் அனுமதி வழங்கப்படும்,’ என்றார்.

The post கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு ரோப்கார் வசதி appeared first on Dinakaran.

Tags : Kollimalai Ahaya Ganga Falls ,Kolimalayan Aai Ganga Falls ,Dinakaran ,
× RELATED நட்சத்திரப்படி வணங்க வேண்டிய பைரவஸ்தலங்கள்