×

குடவாசல் குறுவட்ட போட்டி 43 பள்ளிகளில் இருந்து 800 மாணவர்கள் பங்கேற்பு

 

திருவாரூர், ஆக. 25: திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நடைபெற்ற குறுவட்ட போட்டியில் 43 பள்ளிகளில் இருந்து 800 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்று வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே குறுவட்ட போட்டிகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி குடவாசல், வலங்கைமான் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியங்கள் இணைந்த குடவாசல் குறுவட்ட அளவிலான போட்டியானது நேற்று திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலக மைதானத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தலைமையில் நடைபெற்றது. உடற்கல்வி இயக்குனர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

குறுவட்ட செயலாளரும் சந்திரசேகரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான பொன்னையா வரவேற்றார். அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார்பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற இந்த போட்டியில் மூன்று ஒன்றியங்களிலிருந்தும் 43 பள்ளிகளைச் சேர்ந்த 800 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 100, 200 மற்றும் 800 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம் மற்றும் ஈட்டி எறிதல் உள்ளிட்ட 18 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு போட்டிகளிலும் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.முடிவில் சந்திரசேகரபுரம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

The post குடவாசல் குறுவட்ட போட்டி 43 பள்ளிகளில் இருந்து 800 மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kudavasal CD Competition ,Tiruvarur ,CD ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...