×

பவானி நகராட்சி பகுதியில் புதிதாக தினசரி காய்கறி சந்தை கட்டுவதற்கு கவுன்சிலர்கள் ஆதரவு

 

பவானி,ஆக.25: பவானி நகராட்சி அலுவலகத்தில் கூட்டரங்கில் அவசரக் கூட்டம் தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் நேற்று நடைபெற்றது.துணைத் தலைவர் மணி,ஆணையாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தனர். இதில், அதிமுக, திமுக, சிபிஐ உட்பட 25 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் பவானி நகராட்சி பகுதியில் புதிய தினசரி கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் பவானி நகரப் பகுதியில் புதிய தினசரி சந்தைக்கு கட்ட கூட்டத்தில் முடிவு செய்யலாம் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதற்கு, திமுக, அதிமுக உட்பட 16 கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். 8 கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஒரு கவுன்சிலர் நடுநிலையாக கருத்துத் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து, பவானி அந்தியூர் பிரிவு, காவிரிக் கரையோரத்தில் ஏற்கெனவே இயங்கி வரும் தினசரி காய்கறி சந்தையை இடித்துவிட்டு, புதிதாக காய்கறி சந்தை கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, பொதுமக்கள், காய்கறி வியாபாரிகளிடம் நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில், ஏற்கெனவே உள்ள பகுதியில் காய்கறி சந்தை இருக்க வேண்டும் எனவும், புதிய பஸ் நிலையம் அருகே காலியாக உள்ள நிலத்தில் காய்கறி சந்தை அமைக்க வேண்டும் எனவும் இரு தரப்பினர் வலியுறுத்தியதால் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

தற்போது பெரும்பான்மை உறுப்பினர்கள் காய்கறி சந்தை அமைக்க ஆதரவு தெரிவித்ததால், இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு தெரிவித்து, பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், புதிதாக காய்கறி சந்தை அமைக்கும் முடிவை எதிர்த்து தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

The post பவானி நகராட்சி பகுதியில் புதிதாக தினசரி காய்கறி சந்தை கட்டுவதற்கு கவுன்சிலர்கள் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Bhawani Municipal ,Bhawani ,Sinthuri Ilangovan ,Vice President ,
× RELATED ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியதால் பவானியில் போக்குவரத்து நெரிசல்