×

முன்விரோதத்தால் வாலிபர் கொலை 3 பேருக்கு ஆயுள் தண்டனை: சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, ஆக.25: கோட்டூர்புரம் முருகன் கோயில் பின்புறம் முன்விரோதம் காரணமாக பால்ராஜ் என்பவரை அப்பகுதியை சேர்ந்த 4 பேர் கிரிக்கெட் பேட் மற்றும் ஸ்டம்பால் கடுமையாக தாக்கியதில், படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மரணமடைந்தார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான கொலை வழக்கில், சித்ரா நகரை சேர்ந்த முரளி (22), விவேக் (21), தினேஷ் (21), அரவிந்த் (21) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 3 பேரும் கோட்டூர்புரம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், 3 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.கோவிந்தராஜன், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது, என்று வாதிட்டு ஆவணங்களை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் முரளி, விவேக், தினேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ₹10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரவிந்த் தலைமறைவாக உள்ளதால் அவர் மீதான வழக்கு பிரித்து விசாரிக்கப்பட உள்ளது என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

The post முன்விரோதத்தால் வாலிபர் கொலை 3 பேருக்கு ஆயுள் தண்டனை: சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Sessions Court ,Chennai ,Kotturpuram Murugan temple ,Balraj ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...