×

ஏற்கனவே மூத்த மகளை கொன்று, மனைவி இறந்த நிலையில் 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை

அம்பத்தூர், ஆக.25: சென்னை அயனாவரம் பூசனம் தெருவை சேர்ந்தவர் கீதா கிருஷ்ணன் (50). இஎஸ்ஐ மருத்துவமனையில் தூய்மை பணி சூபர்வைசராக வேலை செய்து வந்தார். இவரது மகள் மான்சா (6) அயனாவரம் தாராப்பூர் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கீதா கிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அயனாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உள்பக்கமாக தாழிட்டு இருந்த கதவை உடைத்து உள்ளே ெசன்றுனர். அங்கு, கீதா கிருஷ்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அருகில் அவரது மகள் மான்சா கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளார்.அவர்களது உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கீதா கிருஷ்ணனுக்கு திருமணமாகி கல்பனா என்ற மனைவியும், குணாலிஸ்ரீ மற்றும் மான்சா ஆகிய 2 மகள்கள் இருந்தனர். இவர்கள் கோட்டூர்புரம் அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். கீதா கிருஷ்ணன் முதலில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அந்த வேலையை விட்டுவிட்டு கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது மனைவி கல்பனா தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் கீதாகிருஷ்ணனுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால், பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடனை உரிய நேரத்தில் அவர் திருப்பி செலுத்தாததால், கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளனர். இதனால் கீதா கிருஷ்ணனும், அவரது மனைவி கல்பனாவும் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி முடிவு செய்துள்ளனர். முதலில் 13 வயது மகளான குணாலிஸ்ரீக்கு அவர்கள் கொசு மருந்தை வாயில் ஊற்றியுள்ளனர். அவர் உடனே உயிரிழக்காத காரணத்தினால், கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அதன் பின்னர், கல்பனா விஷத்தை குடித்துவிட்டு அவரும் தூக்கில் தொங்கி இறந்துள்ளார்.

பின்னர் கீதாகிருஷ்ணன் தற்கொலை செய்ய பயந்து, தனது இளைய மகள் மான்சாவுடன் வீட்டை விட்டு வெளியேறி, திருப்பதிக்கு சென்றுள்ளார். சில நாட்களில் இவரது வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வரவே, அந்த வீட்டின் உரிமையாளரான தண்டபாணி என்பவர் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த போலீசார் உயிரிழந்த குணாலி ஸ்ரீ மற்றும் கல்பனா ஆகியோரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர். அப்போது கீதா கிருஷ்ணன், எங்களது சாவிற்கு கோதண்டபாணி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றது தெரியவந்தது. அவர்களை தேடி வந்தனர். சில நாட்களுக்கு பிறகு, கீதா கிருஷ்ணனையும், மான்சாவையும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் பிடித்தனர்.

இதையடுத்து, கீதா கிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். சிறுமியை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தனது மகள் மான்சாவுடன் அயனாவரம் பகுதியில் மாறி, மாறி 4 வீடுகளில் தங்கியுள்ளார். அவரது பூர்வீக வீடு ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையில் உள்ளது. இதை லட்சுமிபதி என்பவருக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு ₹2.50 லட்சம் பெற்றுக்கொண்டு லீசுக்கு விடுவதாக கீதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆனால், வீட்டை லீசுக்கு விடாமல், பணத்தையும் திருப்பித் தராமல் இருந்துள்ளார். இதனால், லட்சுமிபதி பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார். எனவே, மகளை கொன்று, கீதாகிருஷ்ணன் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

The post ஏற்கனவே மூத்த மகளை கொன்று, மனைவி இறந்த நிலையில் 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Ampathur ,Geetha Krishnan ,Busanam Street, Ayanavaram, Chennai ,ESI Hospital ,
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மாநகர...