×

கிரிவலப்பாதையில் புதியதாக மேற்கு காவல் நிலையம் * அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார் * தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக பெருமிதம் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக

திருவண்ணாமலை, ஆக. 25: திருவண்ணாமலை கிரிவல பக்தர்களின் பாதுகாப்புக்காக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மேற்கு காவல்நிலையத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். திருவண்ணாமலையில் நகர காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், கிழக்கு காவல் நிலையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்நகருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்புக்காக கிரிவலப் பாதையில் புதியதாக மேற்கு காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு காவல் நிலைய திறப்பு விழா நேற்று நடந்தது. வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமை தாங்கினார். வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, கலெக்டர் பா.முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், மேற்கு காவல் நிலையத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, கிரிவலப் பாதுகாப்பு பணிக்கான இருசக்கர ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் 1305 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்பட மொத்தம் 1860 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் 54 காவல் நிலையங்கள் உள்ளன. தமிழ்நாடு காவல்துறை முதல்வரின் தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கூடுதலாக 4 போலீஸ் ஸ்டேஷன்கள் தேைவ என முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன்.

முன்னுரிமை அடிப்படையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மேற்கு காவல் நிலையம் அமைக்க முதல்வர் அனுமதித்துள்ளார். இன்ஸ்பெக்டர் உள்பட 28 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. அதற்காக, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஆன்மிக பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். 14 கி.மீ தூரமுள்ள கிரிவலப்பாதையில் 500க்கும் மேற்பட்ட துறவிகள் உள்ளனர். எனவே, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கத்தில் மேற்கு காவல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல், கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் திருவண்ணாலை கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் அமைக்க கலைஞர் அனுமதி அளித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், 7 காவல் உட்கோட்டங்கள் உள்ளன. அதில், 1,912 போலீசார் பணிபுரிகின்றனர். குறிப்பாக, 497 பெண் போலீசார் உள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக கலைஞர் ஆட்சியில் பெண் போலீசார் பணியில் நியமிக்கப்பட்டனர். திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு அதிகமான பக்தர்கள் வருகின்றனர். கடந்த ஆண்டு 35 லட்சம் பேர் விழாவில் பங்கேற்றனர். ஒரு சிறு சம்பவமும் நடைபெறாமல், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பான பணியே காரணமாகும். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதுதான் முக்கிய காரணம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால்தான், வெளி நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு தொழிற்சாலைகள் தொடங்க முன்வருகின்றனர். அதன்மூலம், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கிறது. பசி, பட்டினி இல்லாத நிலை ஏற்படுகிறது.

திமுக ஆட்சி காலங்களில்தான் காவல்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கடந்த 1969ல் கலைஞர்தான் முதன்முதலில் காவல்துறை ஆணையம் அமைத்தார். அதற்கு பிறகு 1989ம் ஆண்டு மற்றும் 2006ம் ஆண்டுகளில் காவல் ஆணையங்களை கலைஞர் அமைத்தார். ஆணையம் அளித்த பரிந்துரைகளின்படி பல சலுகைளை வழங்கினார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில், தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் காவல் ஆணையம் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். காவல்துறையினரின் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார்.

சந்திராயன் 3 நிலவில் தடம் பதித்துள்ளது. தென்னகத்தில்தான் ஸ்ரீஹரிகோட்டா உள்ளது. அதற்காக, உழைத்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். கலைஞர் நினைவிடத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க பல்வேறு ஆய்வு நடத்தப்பட்டு, மாநில அளவில் சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்பட்டது. தேசிய அளவிலான சுற்றுச்சூழல் குழு ஆய்வு செய்து, பேனா நினைவுச் சின்னம் அமைக்க பரிந்துரை செய்ததன் பேரில், ஒன்றிய அரசும் அனுமதி அளித்திருக்கிறது. அரசியல் காழ்புணர்ச்சியால் தனியார் சிலர் வழக்கு தொடர்ந்தார்கள். அதை நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்டது. சென்னையில் உள்ள 23 மீனவர் குப்பம் பகுதி மக்களும், பேனா சின்னம் அமைக்க விரும்பி கடிதம் அளித்துள்ளனர். எனவே, இரண்டு கட்டங்களாக கலைஞர் நினைவிடம் அமைக்கப்படுகிறது.

முதற்கட்டமாக நடைபெறும் கலைஞர் நிைனவு தளம் திறக்கப்பட்டதும், இரண்டாவது கட்டமாக பேனா சின்னம் அமைக்கும் பணிக்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, முதல்வர் தெரிவிக்கும் போது பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், ராணிப்பேட்டை எஸ்பி கிரண்சுருதி, ஏஎஸ்பி மாநில கைப்பந்து சங்க துணைத்தலைவர் இரா.தரன், நகராட்சித் தலைவர் நிர்மலாவேல்மாறன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் ப.கார்த்திவேல்மாறன், பிரியா விஜயரங்கன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பார்வதி சீனுவாசன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post கிரிவலப்பாதையில் புதியதாக மேற்கு காவல் நிலையம் * அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார் * தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக பெருமிதம் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக appeared first on Dinakaran.

Tags : New West ,Police Station ,Krivalabathi ,Minister AV Velu ,Tamilnadu ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Minister of Public Works ,AV Velu ,West ,Tiruvannamalai Kriwala ,Station ,Kriwala Path ,Tamil Nadu ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...