×

குண்டுமல்லி பூக்கள் விளைச்சல் அமோகம்

ராயக்கோட்டை, ஆக.25: ராயக்கோட்டையில், குண்டுமல்லி பூக்கள் விளைச்சல் அதிகரித்த நிலையில், பறிப்பிற்கு ஆட்கள் பற்றாக்குறையால், பூக்கள் பறிக்க முடியாமல் உதிர்ந்து விடுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில், மலர் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ரோஜா, செண்டுமல்லி, சாமந்தி மற்றும் ஆஸ்டல் உள்ளிட்ட மலர்களுக்கு அடுத்தபடியாக குண்டுமல்லி பூக்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது ராயக்கோட்டை அருகே வஜ்ஜிரபள்ளம், பாலிகானூர் கொட்டாயில் குண்டுமல்லி தோட்டங்கள் அதிகளவில் உள்ளது. இத்தோட்டங்களில் உள்ள செடிகளில், பூக்கள் பூத்து நிரம்பி காணப்படுகிறது.

பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் அதை பறிக்கும் வேலையில் தொழிலாளர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பூ பறிக்க கூலியாட்கள் கிடைக்காததால் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக பூக்களை முழுவதுமாக பறிக்க முடியாமல், செடிகளிலேயே உதிர்ந்து போவதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆவணி மாதம் முகூர்த்தம் மற்றும் விழாக்கள் அதிகம் வருவதால், பூக்களின் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்து வருகிறது. ராயக்கோட்டையில் இருந்து காலையில் ஓசூர் மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட குண்டுமல்லி கிலோ ₹600க்கு விற்றதாகவும், மாலையில் கிலோ ₹800க்கும் மேல் விற்றதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

The post குண்டுமல்லி பூக்கள் விளைச்சல் அமோகம் appeared first on Dinakaran.

Tags : Rayakottai ,
× RELATED செண்டுமல்லி பூ கிலோ ₹5ஆக சரிவு