- 69வது தேசிய திரைப்பட விருதுகள்
- அல்லு அர்ஜுன்
- அலியா பட்
- கிருதி சனோன்
- புது தில்லி
- 2021 ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள்
- விஜய் சேதுபதி
புதுடெல்லி: 2021ம் ஆண்டிற்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் படமாக விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி தேர்வாகியுள்ளது. 2021ம் ஆண்டுக்கான திரைப்பட போட்டியில் ஜெய்பீம், சர்ப்பட்டா பரம்பரை, கர்ணன், ஆர்ஆர்ஆர், கங்குபாய் கத்யாவாடி, மின்னல்முரளி, தி கிரேட் இண்டியன் கிச்சன் உள்ளிட்ட பல முக்கிய படங்கள் இடம்பெற்றிருந்தன. இயக்குனர் கேதன் மேத்தா (திரைப்பட பிரிவு), தமிழ் பட இயக்குனர் வசந்த் சாய் (திரைப்படங்கள் அல்லாத மற்ற பிரிவு), நீரஜா சேகர், யதேந்திர மிஸ்ரா, நானு பாசின் ஆகியோர் தேசிய விருது குழுவில் ஜூரிகளாக இடம்பெற்றிருந்தனர்.
விருது பட்டியல்: சிறந்த படம் – ராக்கெட்ரி. சிறந்த நடிகர் – அல்லு அர்ஜூன் (புஷ்பா). சிறந்த நடிகை – அலியா பட் (கங்குபாய் கத்யாவாடி), கிரித்தி சனோன் (மிமி), சிறந்த குணச்சித்திர நடிகர் – பங்கஜ் திரிபாதி (மிமி). சிறந்த குணச்சித்திர நடிகை- பல்லவி ஜோஷி (காஷ்மீர் ஃபைல்ஸ்). சிறந்த கல்வித் திரைப்படம் – ‘சிற்பங்களின் சிற்பங்கள்’ (இயக்குநர் லெனின்). சிறந்த இசையமைப்பாளர் – ஸ்ரீகாந்த் தேவா (‘கருவறை’ – குறும்படம்). சிறப்பு விருது – மறைந்த நடிகர் நல்லாண்டி- ‘கடைசி விவசாயி’ (தமிழ்). சிறப்பு விருது – இந்திரன்ஸ் – ‘ஹோம்’ (மலையாளம்). சிறந்த தமிழ் திரைப்படம் – கடைசி விவசாயி. சிறந்த தெலுங்கு படம் – உப்பெண்ணா. சிறந்த இந்தி படம் – சர்தார் உதம். சிறந்த கன்னட திரைப்படம் – ‘777 சார்லி’. சிறந்த மலையாள திரைப்படம் – ‘ஹோம்’. தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது – காஷ்மீர் ஃபைல்ஸ். சிறந்த பாடல் இசைக்கான விருது – தேவிஸ்ரீ பிரசாத் ( ‘புஷ்பா’ ). சிறந்த பின்னணி இசை – கீரவாணி (ஆர்.ஆர்.ஆர்).
சிறந்த பிரபல படம்: ஆர்ஆர்ஆர். ஸ்பெஷல் எபெக்ட்ஸ் – ஆர்ஆர்ஆர். சிறந்த நடன இயக்குனர் – பிரேம் ரக்ஷித் (ஆர்ஆர்ஆர்). சிறந்த பாடகர் – கால பைரவா (ஆர்ஆர்ஆர்), சிறந்த பாடகி -ஸ்ரேயா கோஷல் (இரவின் நிழல்), சிறந்த திரைக்கதை – சஹி நாயர் (நாயட்டு). சிறந்த இயக்குனர் – நிகில் மகாஜன் (கோதாவரி – மராத்தி படம்). சிறந்த ஒளிப்பதிவாளர் – அவிக் முக்போத்யாய் (சர்தார் உதம்). தமிழ் சினிமாவுக்கு இந்த முறை 5 விருதுகள் கிடைத்துள்ளது. அதிகபட்சமாக ஆர்ஆர்ஆர் படத்துக்கு 6 விருதுகள் கிடைத்துள்ளது.
தேசிய அளவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட ராக்கெட்ரி படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்தவர் மாதவன். இப்படம் தமிழ், தெலுங்கு என 6 மொழிகளில் வெளியானது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை சம்பவங்களை பின்னணியாகக் கொண்டது. இதில் நம்பி நாராயணனாக மாதவன் நடித்திருந்தார். சிறந்த தமிழ் படமாக தேர்வான கடைசி விவசாயி படத்தை விஜய் சேதுபதி தயாரித்து இருந்தார். மணிகண்டன் இயக்கினார். இதில் முதியவர் நல்லாண்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு பிறகு அவர் இறந்தார்.
* கடைசி விவசாயி கதை என்ன?
ஊரில் விவசாய நிலங்கள் விற்பனையாகிவிட, தனது துண்டு நிலத்தை பத்திரமாக பாதுகாத்து, சொந்த உடல் உழைப்பில் விவசாயம் செய்கிறார் 80 வயது மாயாண்டி (நல்லாண்டி). அதிக விலை தருவதாக சிலர் ஆசை காட்டியும் நிலத்தை விற்க மறுத்துவிடுகிறார். இதற்கிடையே, குலதெய்வக் கோயில் திருவிழாவை நடத்த, ஊர் மரபுப்படி, படையலுக்கு நெல்மணிகளை விளைவித்து தருமாறு மாயாண்டியிடம் மக்கள் கேட்கின்றனர். அதை ஏற்று உழவு செய்கிறார், அந்த கடைசி விவசாயி. ஆனால், விஷமிகள் சிலர், அவர் 3 மயில்களை கொன்று புதைத்ததாக போலீசில் புகார் கொடுக்கின்றனர். மாயாண்டி கைது செய்யப்படுகிறார். அதன் பிறகு மனதை கனக்க செய்யும் கிளைமாக்சுடன் படம் முடிகிறது. இப்படம் சோனி லிவ் ஓடிடியில் வெளிவந்துள்ளது.
The post 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு சிறந்த தமிழ் படமாக ‘கடைசி விவசாயி’ தேர்வு: சிறந்த நடிகர் அல்லு அர்ஜுன்; சிறந்த நடிகை அலியா பட், கிரித்தி சனோன்; 6 விருது அள்ளிய ‘ஆர்ஆர்ஆர்’ appeared first on Dinakaran.