×

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 5 லட்சம் குடியிருப்பு, தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளது: சிலியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: தென் அமெரிக்காவில் உள்ள சிலி குடியரசு நாட்டிற்கு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் 3 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அங்கு சிலி குடியரசு நாட்டின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் அமைச்சர் கார்லோஸ் மான்டெஸ் சிஸ்டர்னாஸ் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் சான்ட்டியாகோ மாநகரில் நடந்தது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: கலைஞரால் குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1970ம் ஆண்டு ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற உயர்ந்த நோக்கில் தொடங்கப்பட்டது. இந்த வாரியம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் என மாற்றம் செய்து ஆணையிட்டார்.
குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு ஒரு குடியிருப்புக்கு ரூ.1.5லட்சம் மானியமாகவும் தமிழ்நாடு அரசு ரூ.7.50 லட்சத்திலிருந்து ரூ.13 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது.

மீதமுள்ள தொகை பயனாளிகளால் ஏற்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 1,45,074 குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.12,500 கோடியில் 4,09,581 குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு திறனுக்கேற்ற வாடகை வீட்டுவசதி திட்டத்தின் கீழ் முன்னோடியாக 6 திட்டப்பகுதிகளில் 60,000க்கும் மேற்பட்ட படுக்கைகள், தங்கும் இடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தொடங்கப்பட்டதிலிருந்து 5 லட்சம் குடியிருப்புகள், தனி வீடுகள் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கட்டப்பட்டு ஏழை எளிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1.30 லட்சம் குடும்பங்களுக்கு மனைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

The post தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 5 லட்சம் குடியிருப்பு, தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளது: சிலியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Urban Habitat Development Board ,Minister ,T. Mo. Anparasan ,Chile ,Chennai ,Minister Thamo Anparasan ,Republic of Chile ,South America ,
× RELATED தென்சென்னை தொகுதியில்...