×

கோவை பாரதி பல்கலையில் பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி: நூற்றுக்கணக்கானோர் கைது; டிஎஸ்பியை தாக்கி தள்ளிவிட்ட பாஜவினர்

கோவை: கோவை பாரதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் பங்கேற்றார். இதில், ஆளுநரும் பல்கலை வேந்தருமான ஆர்.என்.ரவி பங்கேற்று 93 ஆயிரத்து 36 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தார்.

இந்நிலையில், கோவை லாலி ரோடு சிக்னலில் அனைத்து முற்போக்கு அமைப்பினர், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நீட் தேர்வு எதிர்ப்பு உள்ளிட்ட தமிழ்நாடு நலன் சார்ந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல், மாநில பொது பாடத்திட்டத்தை பல்கலைக்கழகங்கள் ஏற்க வேண்டியது இல்லை என்று அறிவித்து தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பி போ என்று கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பட்டமளிப்பு விழாவை முடிந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, கோவையில் இருந்து காரில் பொள்ளாச்சி, உடுமலை வழியாக திண்டுக்கல் மாவட்டம், பழநி கோயிலுக்கு நேற்று மாலை சென்றார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் பழநி பஸ் நிலைய ரவுண்டானா அருகில் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு அருகில் ஆளுநரை வரவேற்க ஏராளமான பாஜகவினர் குவிந்திருந்தனர். இரு தரப்பினரும் மாறி, மாறி கோஷங்களை எழுப்பியதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து எஸ்பி பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது போலீசாரில் ஒரு தரப்பினர் பாஜகவினரை கைது செய்ய முற்பட்டனர். ஆனால் அவர்கள் கைதாக மறுத்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி சரவணன், பாஜ மாவட்ட தலைவர் கனகராஜை கைது செய்ய முற்பட்டார். அப்போது அவரும், பாஜவினரும் டிஎஸ்பியை மார்பில் தாக்கி தள்ளினர். இதில் நிலைகுலைந்தவரை சக போலீசார் தாங்கி பிடித்தனர். பின்னர் போலீசார் பாஜகவினரை கைது செய்தனர்.

* ஆதிக்கு முனைவர் பட்டம்
கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், திரைப்பட நடிகர் மற்றும் இசை அமைப்பாளரான ஹிப்ஹாப் தமிழா ஆதி, மேலாண்மை பிரிவில் இசை தொழில் முனைவோர் என்பதை மையமாக வைத்து பி.எச்டி. ஆராய்ச்சி படித்து முடித்துள்ளார். விழாவில், அவர் பட்டம் பெற்றார்.

* முதன்முதலாக பேச்சு இல்லை கலந்துரையாடலும் ரத்து
பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநர்கள் பேசாமல் இருந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் பட்டமளிப்பு விழாக்களில் மாணவர்கள் மத்தியில் 40 நிமிடங்களுக்கு மேல் பேசுவது வழக்கம். கடந்த ஆண்டுகளில் நடந்த கோவை பாரதியார் பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் அவர் நீண்ட ேநரம் உரையாற்றினார். அப்போது சர்ச்சைக்குரிய சில கருத்துகளை பேசியுள்ளார். ஆனால் முதல் முறையாக நேற்று அவர் பட்டமளிப்பு விழா மேடையில் பேசவில்லை. பல்கலைக்கழக ரேங்க் பெற்ற மாணவர்களிடம் கவர்னர் கலந்துரையாடல் நடத்த இருந்தார். அதுவும் திடீரென ரத்து செய்யப்பட்டது.

The post கோவை பாரதி பல்கலையில் பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி: நூற்றுக்கணக்கானோர் கைது; டிஎஸ்பியை தாக்கி தள்ளிவிட்ட பாஜவினர் appeared first on Dinakaran.

Tags : Bharati University ,Gov. N.N. ,ravikku ,Gov ,Governor ,R.R. N.N. ,Raviku ,post ,Graduation Festival ,Gov. N.N. ravikku ,
× RELATED சட்டப்பேரவை தீர்மானத்தை மீறி...