×

பெண்களுக்கு எதிராக பேசுவதை ஏற்க முடியாது எச்.ராஜாவுக்கு ஐகோர்ட் கண்டனம்: வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: பெண்களுக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக எச்.ராஜா இருந்த போது, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களையும், அவர்களின் குடும்ப பெண்களையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசியதாக, வேடசந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதே போல் பெரியார் சிலையை உடைப்பேன் என்று டிவிட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் தன்மீது பதிவான 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணக்கு வந்தது. அப்போது, எச்.ராஜா தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜராகி, குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால் எச்.ராஜா மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்துமீரான் ஆஜராகி, எச்.ராஜாவின் பேச்சு தனிப்பட்ட நபர்களை மட்டுமல்லாமல், அனைவரையும் பாதிக்க கூடிய வகையில் உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பேசி உள்ளதால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்கு தொடர முடியும். எனவே இந்த வழக்குகளை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வாறு எச்.ராஜா பேசுவது முதல் முறை அல்ல. இதுபோல் கருத்துகளை கூறக்கூடாது. பெண்களை குறி வைத்து குற்றச்சாட்டுகளை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. வெறுப்புணர்வு பேச்சுக்களுக்கு எதிராக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்று தெரிவித்து இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

The post பெண்களுக்கு எதிராக பேசுவதை ஏற்க முடியாது எச்.ராஜாவுக்கு ஐகோர்ட் கண்டனம்: வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : ICourt ,H.Raja ,Chennai ,Madras High Court ,BJP ,National Secretary ,Court ,Dinakaran ,
× RELATED ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி...