
பாகு: அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்த ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன்(32வயது, 1வது ரேங்க்)), இந்தியாவின் இளம் வீரர் ஆர்.பிரக்ஞானந்தா(18வயது, 29வது ரேங்க்) ஆகியோர் மோதினர். பிரக்ஞானந்தா ஏற்கனவே 2022ம் ஆண்டு கார்ல்சனை வென்றிருப்பதால் இந்த முறையும் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே இருந்தது. அதற்கேற்ப முதல் 2 நாட்கள் நடந்த 2 கிளாசிக் ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. அதனால் வெற்றியை முடிவு செய்ய 3வது நாளான நேற்று இருவருக்கும் இடையில் தலா 50 நிமிடங்கள் என நேரத்தின் அடிப்படையிலான டை பிரேக்கர் ஆட்டம் 2 சுற்றுகளாக நடந்தது.
முதல் சுற்றில் கார்ல்சன் கறுப்பு காய்களுடனும், பிரக்ஞானந்தா வெள்ளை காய்களுடனும் நகர்த்தலை தொடங்கினர். முதல் 14வது நகர்த்தல் வரை இருவரும் சமநிலையில் இருந்தனர். அடுத்து 18வது நகர்வுக்கு பின் இருவரும் தங்கள் ராணியை இழக்க ஆட்டம் வேகம் பிடித்தது. ஆனால் கார்ல்சன் தனது 21வது நகர்த்தலுக்கு பிறகு முன்னிலைப் பெற்றார். எனினும் 32வது நகர்வு வரை பொறுமையாக விளையாடிய பிரக்ஞானந்தா ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதனால் ஆட்டம் டிராவாகும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 41வது நகர்வில் இருந்து கார்ல்சன் தனது அனுபவத்தை காட்ட ஆரம்பித்தார். எனவே பிரக்ஞானந்தா தடுமாறினார். அதனை சாதகமாக்கிய கார்லசன் முதல் சுற்றில் வென்றார்.
அதன் பிறகு வெற்றி வாய்ப்பை தக்க வைக்க 2வது சுற்றில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியுடன் பிரக்ஞானந்தா கறுப்பு நிற காய்களுடன் விளையாடினார். கார்ல்சன் 10வது நகர்த்தலில் இருந்து நெருக்கடி தந்தாலும் ஆட்டம் டிராவை நோக்கித்தான் நகர்ந்தது. ஒருக்கட்டத்தில் மந்திரியையும், ராணியையும் அடுத்தடுத்து இழந்த பிரக்ஞானந்தா தடுமாறினாலும், பதிலடி தந்து டைபிரேக்கரின் 2வது சுற்று ஆட்டத்தை டிராவில் முடித்தார். எனினும் பைனலில் கார்ல்சன் 1.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று 6வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்றார். பிரக்ஞானந்தா தோற்றாலும் பைனலில் விளையாடிய இளம் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
*இது சிறிய சாதனையல்ல
பிரதமர் மோடி கூறியதாவது: உலக கோப்பையில் பிரக்ஞானந்தாவின் சிறப்பான ஆட்டத்திற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்! இது சிறிய சாதனையல்ல. அவரது வரவிருக்கும் போட்டிகளுக்கு அவர் மிகவும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள். இவ்வாறு குறிப்பிட்டார். இதே போல் ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்பட பலரும் பாராட்டி உள்ளார்.
* விஸ்வநாதன் ஆனந்த்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடிய 2வது இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.
* உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆனந்த் 5 முறை சாம்பியன் பட்டமும், 4முறை 2வது இடமும் பெற்றுள்ளார்.
* பிரக்ஞானந்தா 2016ல் 10ஆண்டு, 10 மாதம், 19 நாட்களில் சதுரங்க மாஸ்டரானார்.
The post உலக செஸ் சாம்பியன்ஷிப் இளம் வயதில் பிரக்ஞானந்தா 2வது இடம்: கார்ல்சன் 6வது முறையாக சாம்பியன் appeared first on Dinakaran.