×

காக்கிகளால் தூக்கம் தொலைத்த இலை கட்சியின் சேலம் விஐபி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘விறகு வெட்டும் தொழிலாளிகளை ஏமாற்றி, கரன்சியை பதுக்கியது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாநாடு பிரச்ைன இன்னும் ஓய்ந்த பாடில்லை. இப்ப கிரிவலம் மாவட்டத்துல புலம்ப ஆரம்பிச்சிருக்காங்க. கிரிவலம் மாவட்டத்துல வாசி என்று முடியுற நகரத்துல இருந்து, அந்த மாநாட்டுக்கு பத்து வேன்கள்ல மூன்றெழுத்து பெயர் கொண்ட வட்ட செயலாளரு அந்த ஏரியால தொண்டர்களை அழைச்சாராம். யாரும் வரலன்னு சொல்லிட்டாங்களாம். இதனால, 10 வார்டு தள்ளிபோயி அங்க விறகு வெட்டுற கூலி தொழிலாளிங்களை அழைத்துக்கொண்டு போனாராம். அவங்களை இலை கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு இவ்வளவு கரன்சி, சாப்பாடு போன்றவற்றை தூங்கா நகரத்து கூட்டத்துக்கு வந்தா தர்றேன்னு சொன்னாராம்.

அதற்கு முன்னாடி சொந்த ஊர்லேயே இரண்டு வேலை சாப்பாடு வாங்கி கொடுத்தாராம். மாநாடு பந்தலுக்கு போனதுக்கு அப்புறமா, அந்த வட்ட செயலாளரு தான் அழைத்து சென்ற யாரையும் கண்டுக்கவே இல்லையாம். வெளி உலகம் தெரியாத அந்த கூலித்தொழிலாளிங்க, பக்கத்துல சந்தோஷமா இருந்தவங்க கிட்ட விசாரிச்சிருக்காங்க. அப்போ, அவங்க ஒருத்தருக்கு 1 கே கொடுத்து இருக்காங்க… 2 நாளைக்கு சாப்பாடும் கொடுத்திருக்காங்கன்னு சொன்னாங்களாம். இதைகேட்டு திகைத்துபோன அந்த தொழிலாளிங்க யார் கிட்ட சொல்றதுன்னு தெரியாம போய் வேன்ல உட்கார்ந்துட்டாங்களாம். ஒரு நாள் புல்லா சாப்பிடவே இல்லையாம். தண்ணி மட்டும் குடிச்சிகிட்டு வந்திருக்காங்க.

இவங்கேளாட பரிதாப நிலைய பார்த்து வேன் டிரைவரு, அவர்கிட்ட இருக்குற பணத்துல பன், பிஸ்கட் வாங்கி கொடுத்து, திரும்பவும் வாசி நகரத்துல கொண்டுவந்து விட்டாராம்… விறகு வெட்டியிருந்தாலாவது கை செலவுக்கும், வீட்டு செலவுக்கும் கிடைத்து இருக்கும். இப்படி கரன்சி ஆசை காட்டி மோசம் செய்துட்டாங்க…’’ என்று புலம்பியபடியே வீடு போய் சேர்ந்தாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நகையால் யாருக்கு எந்த பிரச்னை வந்தது, புரியும்படி சொல்லேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகர காவல்துறையில் பணிபுரிந்து வந்த ஒரு அதிகாரி வந்த வேகத்தில் மாநகர போக்குவரத்து போலீஸ் பிரிவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார்.

இதன் காரணமாக, மாநகரில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும், உயிர்ப்பலி எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. ஆனால், இவரும், இவரது துணைவியாரும் அடிக்கடி கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்று, பர்சேஸ் செய்துவிட்டு பணம் கொடுக்காமல் வந்து விடுவார்களாம். அதுபோல், வார இறுதி நாட்களில் ஒரு சில ஓட்டல்களுக்கு சென்று நன்றாக சாப்பிட்டுவிட்டு, பில் கொடுக்காமல் வந்து விடுவார்களாம். இந்த விவகாரம் படிப்படியாக கசிந்து, கடைசியில் சென்னையில் உள்ள மேலதிகாரி வரை சென்றுவிட்டது. இதன் காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த அதிகாரியை வேறு இடத்துக்கு தூக்கி அடிச்சுட்டாங்களாம்.

மாநகரில் போக்குவரத்து பிரிவில் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு நல்ல பெயர் வாங்கினாலும், நகை ஆசையால், பதவியை தக்கவைக்க முடியாமல் போன வேதனையில் அந்த போலீஸ் அதிகாரி டிரான்ஸ்பர்ல போயிட்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘விவசாயிகள் வார்த்தைகளால் வறுத்தெடுத்த நபரை பற்றி சொல்லுங்களேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொள்ள விவசாயிகள் வறட்சி பாதிப்புகள் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தாங்களாம்.

அப்போது பேசிய நீர்வளத்துறை அதிகாரி விவாயிகளின் குறைகள், பிரச்னைகளை ஒடுக்கும் வகையில் தன் குரலை உயர்த்தி பேசிக் கொண்டே இருந்தாராம். நாம விவசாயிகள் பிரச்னையை பேச வந்தா, அவரு துறையின் பெருமையை பற்றி சத்தமாக பேசி நம்மள திசை திருப்பிவிட பார்க்கிறாரு என்று விவசாயிகள் கொந்தளித்தார்களாம். எனவே, அந்த அதிகாரியின் பேச்சுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவிச்சாங்களாம். ஒரு கட்டத்தில் அந்த அதிகாரி, நீங்கள் ‘கத்தி’க்கொண்டு இருக்க கூடாது, நாங்கள் கூறுவதை பொறுமையாக கேட்க வேண்டும் என்று கூற ஏற்கனவே கோபத்தில் இருந்த விவசாயிகளின் முகம் சிவந்து மீண்டும் நீர்வளத்துறை அதிகாரியை வார்த்தைகளால் வறுத்தெடுத்துட்டாங்களாம்.

எங்களை பார்த்து ‘கத்தாதீங்க’ என்று எப்படி சொல்லலாம். நாங்கள் என்ன ஆடு, மாடுகளா என்று விவசாயிகள் கேள்வி எழுப்ப, அந்த அதிகாரி கப்சிப் என்று உட்கார்ந்துவிட்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சியின் புது தலைவர் தூக்கம் தொலைத்த கதையை சொல்லுங்க கேட்போம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்காநகரத்து மாநாட்டிற்கு பிறகு இலைக்கட்சியின் புதிய தலைவரு ரொம்பவே மகிழ்ச்சியாகவே இருந்தாராம். அதுவும் புரட்சி என்ற பட்டம் கிடைத்ததிலிருந்து கனவில் கூட தன்னை நினைத்து தானே சிரித்துக் கொள்கிறாராம்.

இலைக்கட்சியின் 3வது தலைவராக உருவெடுத்துள்ள தனக்கு இந்த புரட்சி பட்டம் சரியா இருக்குன்னு தன் வீட்டுக்கு வரும் நிர்வாகிகளிடம் சொல்லி சொல்லி மகிழ்கிறாராம். எத்தனையோ பட்டம் இருந்தாலும் இனிமேல் எனது பெயருக்கு பின்னால் புரட்சி என்ற பெயரை போட்டே ஆகணுமுன்னு சொல்லியிருக்காராம். அதன்படியே ஆகட்டுமுன்னு அவரது அடிபொடிகள் தலையாட்டியிருக்காங்களாம். அந்த சந்தோஷம் புஸ்வானம் போல புஸ் ஆயிடுச்சாம். காரணம், மம்மியின் கொடநாடு பங்களா விவகாரம் திடீரென சூடு பிடிச்சி செய்தி அப்போதுதான் அவர் காதுக்கு வேறு ரூட்டில் வந்ததாம். இந்த கொள்ளையை அடிக்கச் சொன்னதே இலைக்கட்சி புதிய தலைவருன்னு இறந்துபோன மம்மியோட கார் டிரைவரின் சகோதரர் அடிச்சி சொல்றாராம்.

பங்களாவிலிருந்து 5 பை நிறைய ஆவணங்களை கொண்டுவந்து, 3 பை சங்ககிரிக்கும், 2 பை ஆத்தூருக்கும் போச்சின்னு புது குண்டை போட்டிருக்காராம். அந்த ரெண்டு பக்கமும் இருப்பது சேலத்துக்காரரோட நெருக்கிய உறவாம். இதுவரை ஒருவர் மீது மட்டுமே தொண்டர்களுக்கு சந்தேகம் இருந்ததாம். ஆனா அதில் இன்னொருவரு புதிதாக வருவதால இலைகட்சியின் தொண்டர்கள் யாருன்னு தெரிஞ்சிக்க அதிக ஆர்வமாக இருக்காங்களாம். அதோட இலைக்கட்சிக்காரரையும் விசாரிக்கணுமுன்னு சொன்னதினால் அவருக்கு ரொம்பவே டென்ஷனோட தூக்கமும் கலைஞ்சி போச்சாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post காக்கிகளால் தூக்கம் தொலைத்த இலை கட்சியின் சேலம் விஐபி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salem ,the leaf party ,Peter ,Leaf Party ,Yananda ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை