×

சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆராயும் முனைப்பில் செப்டம்பரில் ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்த திட்டம்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

சென்னை: சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆராயும் முனைப்பில் செப்டம்பரில் ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.சந்திரயான்-3 திட்டம் ஒரு பக்கம் வெற்றி பெற்றுள்ள நிலையில், சந்திரனுக்கு அடுத்து சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலனை வெற்றிகரமாக இஸ்ரோ உருவாக்கியுள்ளது.

சூரியனை ஆய்வு செய்யும் இந்த ஆதித்யா திட்டம் கடந்த 2008ம் ஆண்டு முதன்முறையாக கருத்துகள் ஆலோசிக்கப்பட்டு அதற்கான பணிகள் துவங்கப்பட்டது. தற்போது அது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் சூரியனின் வெளிப்புறப் பகுதியில் உள்ள குறைந்த அடர்த்தி கொண்ட கொரோனா மற்றும் சூரியனின் முதல் மூன்று அடுக்குகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2016ம் ஆண்டு முதல் பணிகள் துவங்கப்பட்டது, தற்போது ஆதித்யா எல்1 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் தற்போது தயாரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தற்கு அனுப்பிவைக்கப்பட்டது. சில நாட்களில் விண்கலம் ராக்கெட்டில் பொருத்தப்படும். அதன் பின செப்டம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்படும். ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உடன் ஹாலோ ஆர்பிட் எனப்படும் பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த விண்கலம் 120 நாட்கள் ஆராய்ச்சியை மேற்கொள்ளும்.

இந்த விண்கலம் சுமார் 1500 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தில் மொத்தம் ஏழு பே லோட் கலன்கள் உள்ளன. விஎல்சி, எஸ்யுஐடி, ஏஎஸ்பிஇஎக்ஸ், பாபா, எஸ்ஓஎல்இஎக்ஸ், ஹெச்இஎல்ஒன்ஓஎஸ், மேக்னட் மீட்டர் ஆகிய கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இவை சூரியனின் வெளிப்புற பகுதியான, சோலார் எமிஷன் சூரியனிலிருந்து வரும் வெளிச்சம் குறித்து ஆய்வுகளை ஆதித்யா எல்1 விண்கலம் மேற்கொள்ளவுள்ளது.

இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: பூமியில் உள்ள அனைத்து விதமான வெப்ப நிலைகளும் சூரியனை மையப்படுத்தியே இருக்கிறது. இதனால் சூரியனை ஆய்வு செய்வதால் அதன் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து பூமிக்கு நிகழும் உள்ள ஆபத்துக்கள் மற்றும் பூமி வெப்பமயமாதலை எவ்வளவு வேகமாக தடுக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வுகளை எல்லாம் நடத்த முடியும். இதற்காகவே ஆதித்யா விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர சூரிய புயல் குறித்த ஆய்வுகளையும் இந்த விண்கலம் நடத்தப் போகிறது. அதன்படி சூரிய புயல்கள் எப்போது நடக்கும் என இந்த விண்கலம் முன்கூட்டியே கணிக்கும் திறனை கொண்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆராயும் முனைப்பில் செப்டம்பரில் ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்த திட்டம்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO Scientists ,Chennai ,ISRO ,Moon ,Sun ,Chandrayaan ,ISRO Scientists Info ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...