×

Food spot

விழிஞ்சம் சிக்கன் விழிஞ்சம் என்பது கேரளா, திருவனந்தபுரத்தில் இருக்கிற ஒரு பகுதி ஆகும். அந்த பகுதி உணவுகளில் சுவையிலும் தயாரிப்பிலும் தனித்துவமான அதே நேரத்தில் அனைவருக்கும் பிடித்த டிஷ் என்றால் விழிஞ்சம் சிக்கன் தான். ஆமாம், தலச்சேரி பிரியாணி, மலபார் பரோட்டா எப்படி கேரளா முழுவதும் ஸ்பெஷலோ அதேமாதிரி விழிஞ்சம் சிக்கனும் அனைவராலும் தேடி சாப்பிடும் உணவுகளில் முதன்மையாக இருக்கிறது. இந்தச் சிக்கனின் சிறப்பே அது தயாரிக்கப் பயன்படும் மசாலாதான். பாதி வெந்த சுட்ட கோழியின் நெஞ்சு மற்றும் கால் பகுதியை கொதிக்கும் தேங்காய் எண்ணெயில் போட்டு பிறகு அதனுடன் மிளகு, கறிவேப்பிலை, மிளகாய், மல்லி, வெங்காயம் இதனை மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்ட மசாலாவை அதே எண்ணெயில் சேர்த்து ஏற்கனவே வெந்துகொண்டிருக்கும் சிக்கனுடன் சேர்த்து வேக விட்டு எடுத்துக் கொடுப்பார்கள். நல்ல காரமான சுவையில் தனித்துவமான இந்த சிக்கனை சென்னையில் சாப்பிட வேண்டுமென்றால் பெரியமேட்டில் உள்ள வி சிக்கன் ரெஸ்டாரென்ட் நல்ல சாய்ஸ்.

துக்பா

துக்பா என்பது ஒருவகையான சூப். பெயரைக் கேட்டவுடனே புதிதாக இருப்பது போல இதன் சுவையும் புதிதாகத்தான் இருக்கும். ஆமாம், லடாக், நேபாள் போன்ற பகுதிகளில் இந்த துக்பா சூப் பிரபலம். வண்டிக்கடை களில் இருந்து பெரிய ரெஸ்டாரென்ட் வரை இந்த சூப்பை விற்பனைக்கு வைத்திருப்பார்கள். அடிக்கடி லடாக் சென்றுவரும் சுற்றுலாவாசிகளுக்கு இந்த துக்பா என்னவென்று தெரிந்திருக்கும். அவர்கள் சாப்பிட்டும் கூட இருப்பார்கள். இந்த துக்பா சூப்பை வெஜ் மற்றும் அசைவ சூப்பாகவும் செய்யலாம். குறிப்பாக மஸ்ரூம் மற்றும் முட்டைக்கோஸ் சேர்த்து செய்யப்படும் வெஜ் துக்பா சூப் பருகுவதற்கு நன்றாக இருக்கும். இந்த சூப்பை சென்னையில் சாப்பிட வேண்டுமென நினைக்கும் உணவுப் பிரியர்கள் சூளைமேட்டில் இருக்கிற கைலாஷ் கிச்சன் செல்லலாம்.

அத்தோ

நண்பன் படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் அத்தோவைப் பற்றித் தெரிந்திருக்கும். அத்தோ என்பது பர்மாவின் புகழ்பெற்ற உணவு. நமது ஊரில் நூடுல்ஸ் செய்து சாப்பிடுவோமே அதேமாதிரி பர்பாவில் அவர்கள் கண்டுபிடித்த நூடுல்ஸை வைத்து செய்யப்படுகிற ஒருவகை உணவு தான் இந்த அத்தோ. சென்னையில் பாரீஸ் கார்னரில் இருக்கிற ‘‘அத்தோ ஸ்ட்ரீட் புட்” என்கிற தள்ளு வண்டிக்கடையில் இந்த அத்தோவை சாப்பிட்டால் பர்மாவிற்கே சென்றுவந்தது போல உணரலாம். இங்கே கிடைக்கிற அத்தோவை செய்வதற்கு நமது ஊரில் இருக்கிற நூடுல்ஸை பயன்படுத்தமாட்டார்கள். இதற்காகவே பர்மாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மூலப்பொருட்களைக் கொண்டு இதனைத் தயாரிப்பார்கள். அதுதான் அதன் சுவைக்கு தனிக்காரணம்.

The post Food spot appeared first on Dinakaran.

Tags : Villincham ,Chicken ,Thiruvananthapuram, Kerala ,
× RELATED வரலட்சுமிக்கு என்ஐஏ நோட்டீசால் சரத்குமார் இணைந்தாரா?