×

ராயபுரத்தில் அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.50 கோடி நிலம் மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை அதிரடி

தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் அம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹1.50 கோடி மதிப்புள்ள நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவுபடி கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை ராயபுரம் ஆதாம் சாகிப் தெருவில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.

இந்த கோயிலுக்கு சொந்தமாக மன்னார்சாமி கோயில் தெருவில் 1200 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்தவர் கடந்த 25 ஆண்டுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து மேல் வாடகைக்கு 9 கடைகளும், 3 வீடுகளும் விட்டுள்ளார். இதையறிந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், இடத்தை காலி செய்யும்படி சம்பந்தப்பட்டவரிடம் நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அவர் இடத்தை காலி செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

இதனால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு கோயில் நிலத்தை மீட்கலாம் என இந்து சமய அறநிலைத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு கூறியது. இதையடுத்து, நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு நித்யா, நற்சோணை, கோயில் செயல் அலுவலர் அமுலு ஆகியோர் ராயபுரம் காவல்துறை உதவியுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

பின்னர், கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து நடத்தப்பட்ட 9 கடைகள், 3 வீடுகளை பூட்டி சீல் வைத்து மீட்டனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ராயபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு தற்போது ₹1 கோடியே 50 லட்சம் இருக்கும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

The post ராயபுரத்தில் அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.50 கோடி நிலம் மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Amman ,Temple ,Rayapuram ,Hindu Religious Institute of Action ,Kandadarpet ,Hindu Religious Institute ,Amman Temple ,Rayapura ,Raipura ,
× RELATED காமாட்சி அம்மன் கோயிலில் ₹37.12 லட்சம் உண்டியல் காணிக்கை