×

பாரிமுனை பர்மா பஜாரில் வாடகை செலுத்தாத 48 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

தண்டையார்பேட்டை: பாரிமுனை பர்மா பஜாரில் வாடகை பாக்கி வைத்த 48 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில், சென்னை மாநகராட்சி 5வது மண்டலம் 60வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பர்மா பஜார் உள்ளது. இங்கு, செல்போன், லேப்டாப், எலெக்ட்ரானிக் பொருட்கள், பேக், பொம்மைகள், அலங்கார பொருட்கள், வெளிநாட்டு பொருள்கள், பிஸ்கட்கள், உலர் பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கி வருகிறது.

இங்குள்ள கடைகள் முறையாக மாதந்தோறும் மாநகராட்சியின் வருவாய் துறைக்கு வாடகை செலுத்தவேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக 375 கடைகள் சரிவர வாடகை செலுத்தவில்லை. இதனால் 75 லட்ச ரூபாய் வரை வாடகை பாக்கி உள்ளது. வாடகையை செலுத்தும்படி மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் பலமுறை கடைக்காரர்களிடம் கூறியும் வாடகை செலுத்தவில்லையாம். இந்நிலையில் இன்று முதல்கட்டமாக மாநகராட்சியின் வருவாய் துறை அதிகாரி, நீதிபதி தலைமையில் ஊழியர்கள் வடக்கு கடற்கரை போலீசார் உதவியுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

பின்னர், அதிக வாடகை பாக்கி வைத்துள்ள 48 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். மேலும் வாடகை செலுத்தாத கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்து, உடனடியாக வாடகை செலுத்தவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையாக மீதமுள்ள கடைகளும் பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் பாரிமுனை பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

The post பாரிமுனை பர்மா பஜாரில் வாடகை செலுத்தாத 48 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Parimuna Burma Bazaar ,Thandaiyarpet ,
× RELATED மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே...