×

இன்று இறுதி யுத்தம்! பிரக்ஞானந்தா சாம்பியனாக ரசிகர்கள் பிரார்த்தனை

பாகு: சந்திரயான் 3 வெற்றிகரமாக நேற்று நிலாவில் தரையிறக்கப்பட்ட நிலையில், இன்று நடக்கும் செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தாவும் வெற்றிபெற வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் கடந்த 2 நாட்களாக மக்களை திரும்பி பார்க்க வைத்து இரு நிகழ்வுகள் தான். அதில் ஒன்று சந்திரயான் 3, இன்னொன்று பிரக்ஞானந்தா. சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதை இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவின் வளர்ச்சியை இந்திய மக்கள் அனைவரும் எண்ணி எண்ணி வியந்து வருகின்றனர். அதேபோல் செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு 20 ஆண்டுகளுக்கு பின் முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் பிரக்ஞானந்தா. விஸ்வநாதன் ஆனந்திற்கு பின் மீண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரரால் தான் இந்த சாதனை இந்தியாவின் வசமாக மாறி இருக்கிறது. பிரக்ஞானந்தாவின் ஒவ்வொரு நகர்வுகளும் இந்திய ரசிகர்களின் இதயதுடிப்பை பல மடங்கு எகிற வைத்துள்ளது. கறுப்பு மற்றும் வெள்ளை நிற காய்களுடன் 64 கட்டங்களுக்கு ஆடப்படும் செஸ் விளையாட்டில் இவ்வளவு பரபரப்பு இருக்கிறதா என்று ரசிகர்கள் பலரும் வியந்து வருகின்றனர்.

உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை 18 வயதேயாகும் சென்னையைச் சேர்ந்த சிறுவன் எதிர்கொண்டு யுத்தம் செய்வதே ஒவ்வொருவருக்கும் பெருமையாக உள்ளது. ஆனால் இதற்கு முன் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 2 மற்றும் நம்பர் 3 இடங்களில் இருந்த வீரர்களை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பதால், கனவு சாத்தியப்படும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ”ஜெயிச்சுடு மாறா” என்ற மீம்ஸ்கள் பிரக்ஞானந்தாவுக்காக உருவாக்கப்பட்டு அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

அன்று விஸ்வநாதன் ஆனந்த் எப்படி தனது தாய் சுசீலாவின் ஆதரவுடன் செஸ் உலகக்கோப்பையை வென்றாரோ, அதேபோல் பிரக்ஞானந்தாவும் தனது தாய் நாகலட்சுமியுடன் உலகக்கோப்பையை வெல்வதற்காக களம் புகுந்துள்ளார். இன்றைய நாளின் டை பிரேக்கரில் பிரக்ஞானந்தா வென்றால், அது இந்தியாவுக்கே திருவிழாவாக மாறும். இதனால் பிரக்ஞானந்தா வெற்றிபெற வேண்டும் என்று நாடு முழுவதும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post இன்று இறுதி யுத்தம்! பிரக்ஞானந்தா சாம்பியனாக ரசிகர்கள் பிரார்த்தனை appeared first on Dinakaran.

Tags : Pragnananda ,Baku ,Chandrayaan 3 ,Chess World Cup ,Dinakaran ,
× RELATED பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளராக ரஷ்ய...