×

வெற்றி தரும் வெட்டிவேர்! வறட்சி மாவட்டத்திற்கு வரப்பிரசாதம்

வறட்சி மாவட்டத்திற்கு வரப்பிரசாதம்

ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சியான மாவட்டம், கடற்கரைகள் சூழ்ந்த உப்புக்காற்று, உவர்ப்புத் தண்ணீர், உவர்ப்பு மண் நிறைந்த பூமி என்பது அனைவருக்கும் தெரியும். தண்ணீர் இல்லாத மாவட்டம் என்ற பெயரைப் பெற்றிருந்தாலும், இருக்கும் நீரை வைத்து தென்னை, மா, கொய்யா, மல்லிகை போன்ற பயிர்களை விவசாயம் செய்து வருகிறார்கள் இப்பகுதி விவசாயிகள். மண்ணும், நீரும் பொய்த்துப்போன ராமநாதபுரம் கடற்கரைப்பகுதியில் முதன்முதலாக வெட்டிவேர் விவசாயத்தை கையில் எடுத்திருக்கிறார்
ஆர்.முத்துக்குமரன்.

“ராமேஸ்வரம் முழுக்கவே மணல் பகுதிதான். இங்கு அடிப்படையான தொழில் என்றால் அது மீன்பிடித் தொழில்தான். மண்ணையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வண்ணம் வெட்டிவேர் நடலாம் என முடிவெடுத்தோம்’’ என சமூக அக்கறையோடு பேசத்தொடங்கிய முத்துக்குமரன் தொடர்ந்து பேசினார். “கடந்த 8 வருடங்களாக ராமேஸ்வரம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையில் உறுப்பினராக இருக்கிறேன். எங்களது அறக்கட்டளையைச் சேர்ந்த நண்பர்கள் செந்தில்குமார், கணேசன், நம்புவேல், அரிகரன், சேகர் ஆகியவர்களோடு சேர்ந்து நானும் வெட்டிவேர் விவசாயம் செய்து வருகிறேன்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், கடல் மண் அரிப்பை தடுக்கவும் சோதனை முறையில் வெட்டிவேர் பயிரிடப்பட்டது. அதுவே தற்போது முழுநேர தொழிலாகி ஏக்கர் கணக்கில் தோட்டம் அமைத்து, வேர் மட்டுமின்றி எண்ணெய் உள்ளிட்ட மதிப்புக்கூட்டி பொருட்கள் தயாரித்து லாபம் ஈட்டி வருகிறோம். வெட்டிவேர் என்பது சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கூடிய ஒரு அறுகம்புல் வகையை சேர்ந்தது. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்த வேர் உலகம் முழுவதும் இருக்கிற 120 நாடுகளில் வெட்டிவேர் என்ற தமிழ்ப்பெயரிலேயே அழைக்கப்படுகிறது. குளிர்ச்சியான பயிராக இருப்பதால் நாட்டு மருந்துகள் தயாரிப்பில் முக்கிய இடம் பிடிக்கிறது. இது போக மாலைகள் உள்ளிட்ட கைவினைப்பொருட்கள், இயற்கையான சானிடரி நாப்கின், சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட இயற்கையான அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு, எண்ணெய், தைலம் என மதிப்புக்கூட்டு பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

வெட்டிவேரின் பயன்பாடு என்பது நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அதன் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பரவலாக குறிப்பிட்ட பகுதிகளில் ஏக்கர் கணக்கில் வெட்டி வேர் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பேய்கரும்பு, தங்கச்சிமடம், பால்குளம் ஆகிய பகுதிகளில் வெட்டிவேர் பயிரிடலாம் என முடிவெடுத்து எங்களுக்கு சொந்தமான இடத்திலும், குத்தகை முறையில் சில ஏக்கரையும் சேர்த்து மொத்தம் 10 ஏக்கர் பரப்பளவில் வெட்டிவேர் பயிரிட்டிருக்கிறோம். கடந்த மூன்று வருடங்களாக இந்த விவசாயத்தில் இருக்கிறோம்.

இப்போதுதான் வெட்டிவேர் விவசாயத்தில் நாற்று நடவில் இருந்து விற்பனை வரை இருக்கிற சிரமங்கள் தெரியவருகிறது. முதலில் வெட்டிவேர் பயிரிடுவதற்கான நாற்றுகளை பெங்களூர் நறுமண ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து வாங்கினோம். ஒரு நாற்று 80 காசு முதல் 1 ரூபாய் வரை விற்கப்படுகிறது. முதன்முதலில் நாங்கள் வெட்டிவேர் பயிரிடுவதால் அவர்கள் நாற்றுகளை இலவசமாகவே வழங்கினார்கள். வெட்டிவேர் பயிரானது இலகுவான மணல் பாங்காக உள்ள நிலப்பரப்பில் எளிதாக வளரக்கூடியது என்பதால், எங்கள் பகுதி மண் அதற்கு உகந்ததாக இருந்தது.

வெட்டிவேரைப் பொறுத்தவரை 8 ரகம் உள்ளது. இதில் கடற்கரை பகுதி மண்ணிற்கு ஏற்றது சிம்விருத்தி மற்றும் தரணி ரகங்கள்தான். தரணி ரகம் 18 மாதப்பயிர். சிம்விருத்தி ரகம் 10 மாதப்பயிர். நமது நிலத்தில் இந்த 2 ரகங்களையும் பயிரிட்டு இருக்கிறோம். வெட்டிவேர் நாற்றுகளை நடவு செய்யும்போது அரை அடிக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்தால் ஏக்கருக்கு 35,000ல் இருந்து 40,000 நாற்றுகள் வரை பயிரிடலாம். ஒரு நாற்றில் மட்டும் அறுவடை செய்யும்போது 15ல் இருந்து 40 தூர்கள் வரை விளைச்சல் எடுக்கலாம்.

மணல் பரப்பில் இதை பயிரிட வேண்டும் என்பதால் மணலில் வெட்டி வேர் ஆழமாக செல்வதற்காக நாற்று நடுவதற்கு 20 நாட்கள் முன்பாகவே தண்ணீர் விட்டு நன்றாக மண்ணை குளிரவிட்டு மண்ணை இலகுவாக்க வேண்டும். அப்படி செய்தால் வெட்டிவேர் நல்ல முறையில் இலகுவாக மண்ணில் இறங்கி வளர்வதற்கு தோதாக இருக்கும்.

வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிர் என்பதால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதுமானது. இந்த விவசாயத்திற்கு தனி மருந்தோ, தெளிப்பானோ கிடையாது. பூச்சிகளிடம் இருந்து வேர்களை காப்பாற்றினாலே போதுமானது. அதனால் இயற்கை முறையில் விவசாயம் செய்வதே சிறந்தது. நாங்கள் பயிரிட்டிருக்கிற இந்த வெட்டிவேர் விவசாயத்தில் மாட்டுச்சாணி, கோமியம் மட்டுமே பயன்படுத்துகிறோம். இதை தெளிப்பான் முறையிலும், பாசன நீருடன் கலந்தும் விடுகிறோம். அதுபோக, வெட்டிவேர் இனிப்பாக இருப்பதால் அந்த வேரைக் கடித்து துண்டிப்பதற்கு மணலில் அதிகமாக காணப்படும் தென்னையை தாக்கக்கூடிய பூச்சிகள் வரும்.

இந்த வகை பூச்சிகளை விரட்டுவதற்கும், வராமல் தடுப்பதற்கும் கசப்புத்தன்மை அதிகம் உள்ள வேப்பம்புண்ணாக்கை பயன்படுத்துகிறோம். இந்த இரண்டு விதமான பராமரிப்பை செய்து வந்தாலே போதும். வெட்டிவேரில் நல்ல லாபம் பார்க்கலாம். வெட்டிவேர் நாற்று விசயத்தில், மல்லிகைப் பதியங்களை பராமரிப்பது போல கவனம் செலுத்த வேண்டும்.

இது மண்ணைக் கெட்டியாக பிடித்துக்கொள்ளும் தன்மை கொண்டது என்பதால் அறுவடைக்கு 20 நாட்களுக்கு முன்பு தண்ணீர் விடுவதை நிறுத்திவிட வேண்டும். பிறகு இந்த வேர்கள் எடுக்கப்பட்டு, மாலை உள்ளிட்ட கைவினைப் பொருள் தயாரிக்க, மருத்துவ பயன்பாட்டிற்கு, சோப்பு உள்ளிட்ட இயற்கை அழகுசாதன பொருட்கள், வாசனை திரவியங்கள், எண்ணெய், தைலம் உள்ளிட்டவை தயாரிக்க என தனித்தனியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

தரம் பிரிக்கப்பட்ட வேர்கள் எண்ணெய் தயாரிப்பு, வாசனை திரவியங்கள் தயாரிப்புக்கு ஒரு கிலோ வெட்டிவேர் ரூ.220 முதல் 250 வரைக்கும், மாலை, கைவினைப் பொருள் தயாரிப்பிற்கு உகந்த வெட்டிவேர் ரூ.130 வரைக்கும் விலை வைத்து விற்கப்படுகிறது. வெட்டிவேர் விவசாயத்தில் நடவு செலவை விட அறுவடை செலவுதான் அதிகமாக வரும். ஆண்டிற்கு ஒருமுறை அறுவடை செய்யப்படும் இந்த வேரை அறுவடையின்போது இயந்திரம் மூலம் மட்டுமே பறிக்கப்படுகிறது.

இதனால் அறுவடை செய்யும்போது செலவு அதிகமாக வரும். அந்த வகையில் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவாகும். முதன்முதலாக இந்த வருடம்தான் அறுவடை செய்திருப்பதால் வரவு, செலவு, விற்பனை போன்ற விசயங்களில் கவனம் இல்லாமல் இருந்து விட்டோம். அடுத்த வருட அறுவடைக்கு கடந்த வாரம் ஆடி 18ல் மேலும் இரண்டு ஏக்கரில் நாற்றுகள் நட்டிருக்கிறோம். அதில்தான் வருமானம் என்ன? லாபம் என்ன? என்பது குறித்து முழுமையாகத் தெரியும்’’ என்கிறார்.

தொடர்புக்கு: முத்துக்குமரன் – 94439 76701 ஸ்ரீராம்நாத் – 98424 53102

தொகுப்பு: மு.சுப்ரமணிய சிதம்பரம்

படங்கள்: பொன்.சத்யா

The post வெற்றி தரும் வெட்டிவேர்! வறட்சி மாவட்டத்திற்கு வரப்பிரசாதம் appeared first on Dinakaran.

Tags : Vetiver ,Drought District ,Ramanathapuram district ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்