×

3 வருடத்துக்கு முன் மகளை கொன்று தாய் தற்கொலை செய்த நிலையில் 6 வயது பெண் குழந்தையை கொன்று தந்தை தூக்குப் போட்டு தற்கொலை: கடனில் குடும்பமே அழிந்தது

பெரம்பூர்: சென்னை அயனாவரம் பூஷனம் தெருவில் வசித்தவர் கீதாகிருஷ்ணன் (50). இவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் துப்புரவு சூப்பர்வைசராக பணியாற்றினார். இவரது மகள் மான்ஷா (6). இவர் அயனாவரம் பகுதியில் உள்ள பள்ளியில் யுகேஜி படித்துவந்தார். இந்த நிலையில், கீதாகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நேற்றிரவு அயனாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து எஸ்ஐ பாண்டியன் தலைமையில் போலீசார் சென்று பார்த்தபோது அங்கு கீதாகிருஷ்ணன் தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.

அருகில் அவரது மகள் மான்ஷா அசைவின்றி கிடந்ததை கண்டதும் உடனடியாக போலீசார் கதவை உடைத்து சென்று பார்த்தபோது மான்ஷா கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடப்பதும் தூக்கில் கீதாகிருஷ்ணன் பிணமாக கிடப்பதும் தெரியவந்தது. 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனை செய்ய கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கீழ்பாக்கம் துணை கமிஷனர் கோபி, அயனாவரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் விசாரித்தனர்.

கீதாகிருஷ்ணனுக்கு சொந்தமான வீடு, ஓட்டேரி சுப்புராயன் மெயின் தெருவில் உள்ளது. அந்த வீட்டை லட்சுமிபதி என்பவருக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு 2.50 லட்சத்துக்கு லீசுக்கு விடுவதாக கூறியுள்ளார். இதன்பிறகு வீட்டையும் லீசுக்கு விடாமல் பணத்தையும் திரும்ப கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் லட்சுமிபதி நேற்றுகாலை கீதாகிருஷ்ணனுக்கு போன் ெசய்தபோது அவர் போனை எடுக்காததால் நேராக அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டு கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லை. ஆனால் வீட்டின் வெளியே கீதா கிருஷ்ணனின் செருப்பு இருந்ததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது கீதா கிருஷ்ணன் தூக்கில் தொங்குவது பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இவ்வாறு தெரியவந்துள்ளது.

இதையடுத்து மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்துள்ள தகவல்கள் வருமாறு;
கீதா கிருஷ்ணனுக்கு கல்பனா என்ற மனைவியும் குணாலிஸ்ரீ, மான்ஷா என்ற மகள்கள் இருந்தனர். முதலில் ஆசிரியராக பணியாற்றி வந்த அவர், அந்த பணியை விட்டுவிட்டு கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளார். தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக கல்பனா பணியாற்றியுள்ளார். கொரோனாவின்போது கீதா கிருஷ்ணனுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கடன் சுமை அதிகரித்துள்ளது. தொழிலில் ஏற்பட்ட பிரச்னையை தீர்க்க பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருக்கிறார். ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியாததால் பணம் கொடுத்தவர்கள் நெருக்கடிகொடுத்துள்ளனர். இதனால் நண்பர்கள் இருவரிடம் பணம் கேட்டபோது அவர்களும் இல்ைல என்று கூறியுள்ளனர். இதனால் கீதாகிருஷ்ணனும் கல்பனாவும் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதன்படி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி 13 வயதான மகள் குணாலி ஸ்ரீக்கு கொசு மருந்தை வாயில் ஊற்றியுள்ளனர். உடனடியாக அவர் உயிரிழக்காததால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு கல்பனா விஷம் குடித்து தூக்கில் தொங்கி இறந்துள்ளார். இதன்பிறகு கீதாகிருஷ்ணன் தற்கொலை செய்துகொள்ளாமல் பயந்துபோய் இளைய மகள் மான்ஷாவுடன் திருப்பதிக்கு சென்றுள்ளார். இதனிடையே சென்னை கோட்டூர்புரத்தில் கீதாகிருஷ்ணன் வசித்துவந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வரவே அந்த வீட்டின் உரிமையாளர் தண்டபாணி கொடுத்த தகவல்படி, போலீசார் வந்து விசாரித்துவிட்டு குணாலி ஸ்ரீ, கல்பனா ஆகியோரின் உடல்களை மீட்டுள்ளனர். இதுசம்பந்தமாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது கீதா கிருஷ்ணன், ‘’எங்களது சாவுக்கு கோதண்டபாணி, ரவிச்சந்திரன் ஆகியோர்தான் காரணம் என்று கடிதம் எழுதிவைத்திருப்பது தெரியவந்தது. இதனால் கீதாகிருஷ்ணன், மான்ஷா ஆகியோர் வெளியே எங்காவது சென்று தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று கருதியுள்ளனர். இதன்பிறகு சில நாட்கள் கழித்து கீதாகிருஷ்ணனையும் மான்ஷாவையும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் பிடித்து கீதா கிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அவரது மகளை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது கீதா கிருஷ்ணன் கூறும்போது, ‘’கடன் தொல்லையால் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தோம். மூத்த மகள், மனைவி இறந்த பிறகு இளைய மகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து திருப்பதிக்கு சென்றேன். இரண்டு நாட்கள் தங்கிய பிறகு மனது மாறி வந்துவிட்டேன்’ என்றார்.

இதன்பிறகு சிறையில் இருந்து வந்த கீதாகிருஷ்ணன், மகள் மான்ஷாவுடன் அயனாவரம் பகுதியிலேயே 4 வீடுகளில் தங்கியுள்ளார். அவரது பூர்வீக வீடு ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையில் உள்ளது. கீதா கிருஷ்ணனுடன் பிறந்த 8 பேருக்கும் அந்த வீட்டில் பங்கு உள்ளது. குறிப்பிட்ட அந்த வீட்டில் ஒரு பகுதியை மட்டும் லீசுக்கு விடுவதாக கூறி கீதா கிருஷ்ணன், லட்சுமிபதி என்பவரிடம் 2.50 லட்ச ரூபாய் வாங்கி அதையும் தர முடியாமல் கடன் தொல்லையால் மகளை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஒரு மகளை கொன்றுவிட்டு மனைவி தூக்குப்போட்டு இறந்துவிட்ட நிலையில், இரண்டாவது மகளையும் கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மகளுக்கு இறுதி சடங்கு
வீட்டின் கதவை உடைத்து போலீசார் சென்றபோது சிறுமி மான்ஷாவின் உடல் மீது துணி போர்த்தப்பட்டு சால்வை அணிவிக்கப்பட்டு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு தலை பகுதியில் வைக்கப்பட்டு ஊதுபத்தியும் கொளுத்தப்பட்டு அது முழுவதும் எரிந்து அணைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் மகளை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு அவருக்கு இறுதி காரியங்களையும் செய்துவிட்டு இதன்பிறகு கீதாகிருஷ்ணன் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

The post 3 வருடத்துக்கு முன் மகளை கொன்று தாய் தற்கொலை செய்த நிலையில் 6 வயது பெண் குழந்தையை கொன்று தந்தை தூக்குப் போட்டு தற்கொலை: கடனில் குடும்பமே அழிந்தது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Geethakrishnan ,Bhushanam Street, Ayanavaram, Chennai ,ESI Hospital ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...